சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மேலும் ஒரு தமிழ் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாகத்
தெரிய வருகிறது. இன்று காலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் கொழும்பு
நவகும்பரப் பகுதியில் இடம்பெற்றிருப்பதாகவும், 45 வயதுடைய பாலகிருஷ்ணன்
ஆனந்தன் என்ற நபரே கடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது பிள்ளையை பாடசாலையில் சேர்த்தபின் திரும்பி வரும் வழியில் இவர்
கடத்தப்பட்டுள்ளார். இக் கடத்தல் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தடுக்க
முயன்ற போதும், வானில் இருந்த நால்வர் குறித்த நபரை பலாத்காரமாக வானில்
கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்கடத்தல் சம்பவம்
இடம்பெற்றுள்ளதை காவல்துறையும் உறுதி செய்துள்ளதாகவும் அறிய வருகிறது.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவில் இடம்பெறும் வெள்ளைவான்
கடத்தல்கள் தொடர்பில் பேசப்பட்டிருந்தது. ஆயினும் இது தொடர்பில் அரசும்,
காவல்துறையும் செயலற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.