ஆட்கடத்தல்
என்பது சட்டத்தின் உத்தியோகபற்றற்ற பகுதியாக மாறிவிட்டதென மக்கள் விடுதலை
முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 29 கடத்தல்
சம்பவங்கள் ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டதென கொழும்பில் நேற்று (08)
இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று வெள்ளை வான் கலாசாரம் நாட்டில் சட்டமாக மாறிவிட்டதெனவும் அது
தொடர்பில் கைது செய்தல் சட்டத்தின் முன் நிறுத்தல் போன்றவை செயற்பாட்டில்
இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில வெளிப்படையான விடயங்களை மூடி
மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் கொலன்னாவை சம்பவத்தில் அது
தெளிவாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த சட்டவிரோத செயல் மற்றும் ஜனநாயக விரோத செயலுக்கு
எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க
அழைப்பு விடுத்துள்ளார். இந்த நடவடிக்கைகளை நிறுத்தி அதற்கு
முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டமையை,
அவர்களுடைய மாநாட்டை சீர்குலைக்க எடுக்கப்பட்ட சிறிய நடவடிக்கையாக தாம்
கருதவில்லை எனவும் அதனை நாட்டின் பிரஜைக்கு இருக்க வேண்டிய ஜனநாயக உரிமையை
கடத்தும் செயலாக தாம் காண்பதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.