இந்தியாவிலிருந்து
இலங்கைக்கு கொண்டுவரும் பொருட்களைக் கண்காணிக்கவென கட்டுநாயக்க விமான
நிலையத்தில் விஷேட குழுவொன்று செயற்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இன்றைய
நிலையில் இந்தியாவிருந்து இலங்கைக்கு வரும் ஒவ்வொரு பயணியினதும் பொதிகள்
சுங்க அதிகாரிகளால் சுங்கத் தீர்வைக்கு உட்படுத்தப்படுவதுடன் மேலதிகமாக
கொண்டுவரப்படும் பொருட்களுக்கு சுங்கத் தீர்வை அறவிடுவதாக பயணிகள்
தெரிவிக்கின்றனர்.
இலங்கையிலிருந்து
சாதாரணமாக இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் நாடு திரும்பும் போது
அங்கிருந்து கொண்டுவரும் பொருட்கள் பாவனைக்கு ஏற்ற வகையில் இருப்பின்
மட்டுமே அவை பயணிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
ஏனையவைகளுக்கு
சுங்கத் தீர்வை அறவிடப்படுகின்றது. குறிப்பாக ஆடைகளோ பொருட்களோ ஒரு டசின்
அல்லது இரண்டு டசின் என மொத்தமாக எடுத்துவர முடியாது.
இவ்வாறான செயற்பாடுகளால் வர்த்தகர்களும் சுற்றுலா பயணிகளுமே வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக
புலம்பெயர்ந்து வாழ்வோர் தங்கள் திருமண விழாக்கள், கொண்டாட்டங்களை
இந்தியாவிலேயே நடத்துகின்றனர். இதனால் கொண்டாட்டங்களுக்கு வருவோர்
இந்தியாவில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு இலங்கைக்கு
வந்து பின்னரே நாடு திரும்புகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவிருலிருந்து இலங்கைக்கு வரும் வர்த்தகர்கள் பொருட்களை கொண்டுவருவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறானவர்களைக் கண்காணிக்க விமான நிலையத்தில் விசேட குழுவொன்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.