இனவழிப்பிற்கெதிரான
தமிழர் அமைப்பினால் தேவிபுரத்தில் நடந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ள கூட்டுப்
பாலியல் வன்புணர்வு பற்றிய சாட்சிகள் கண்ணால் கண்ட சாடிசியங்கள் மூலம்
சேகரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 200 பேர்கொண்ட பொதுமக்கள் குழுவொன்று
முன்னேறிவந்த இராணுவ அணி ஒன்றிடம் சரணடைந்தபோது சுமார் 20 இளம் பெண்களைத்
தனியாகப் பிரித்தெடுத்த இராணுவம் அவர்களைக் கூட்டாகப் பாலியல்
வன்புணர்விற்கு உற்படுத்தியதாக கண்ணால் கண்ட சாட்சியங்கள் கூறியுள்ளன.
2009 ஏப்ரில் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் சிறிலங்காவில் நிலவி வரும்
அடக்குமுறை மற்றும் சாட்சியங்களுக்கான பாதுகாப்பின்மை என்பவற்றால் இதுவரை
வெளியே வராமல் இருந்துள்ளது.
வடக்கே
ஆனையிறவிலிருந்து தெற்கு நோக்கிச் சாலையூடாக முன்னேறிய 55 ஆம் பிரிவே
தேவிபுரம் பகுதியில் நிலைகொண்டிருந்ததாகவும், அதுவே இந்தக் கூட்டுப்
பாலியல் வன்புணர்விற்குக் காரணம் என்றும் கண்ணால் கண்ட சாட்சியங்கள்
கூறுகின்றன. பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலமையிலான இந்த இராணுவ அணியே இந்த
பிரதேசத்தை முதலில் ஆக்கிரமித்துக்கொண்டதுடன், ஆரம்பத்திலமிப்பகுதியில்
இடம்பெற்ற பாரிய போர்க்குற்றங்களையும் இந்தக் குழுவே செய்துள்ளதாகவும்
தெரியவருகிறது.
வெளிநாடொன்றில்
அரச பிரதிநிதியாக இருக்கும் பிரசண்ண டி சில்வாவுக்கெதிராக
தொடுக்கப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கில் இவ்விடயங்கள் ஆராயப்படுமிடத்து
இக்காலப் பகுதியில் இடம்பெற்ற பாரிய கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள்
உற்பட்ட பாரிய போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.