
நேற்றைய போட்டியில் 13ஆவது ஓவரை இந்திய அணியின் முனாஃப் பட்டேல் வீசினார். அப்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த குமார் சங்கக்கார அந்த ஓவரின் பந்தை அடிக்க முனைந்த போதிலும், பந்து துடுப்பில் பட்டு அவரது விக்கெட்டைத் தகர்த்தது. விக்கெட் காப்பாளர் விக்கெட்டிற்கு அருகே நின்று விக்கெட் காப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் பந்து விக்கெட் காப்பாளரின் காற்தடுப்பில் பட்ட பின்னரே விக்கெட்டைத் தகர்த்ததாக எண்ணி தென்னாபிரிக்க நடுவரான ஜொஹன் குளோற் அதை ஆட்டமிழப்பாக வழங்க மறுத்துவிட்டார்.
விக்கெட் காப்பாளரான தினேஷ் கார்த்திக்கோ அல்லது துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காரவோ பந்தைக் கவனிக்காத நிலையில் அதுகுறித்து கருத்துக்களை வெளியிடாத நிலையில், பந்துவீச்சாளர் முனாஃப் பட்டேல் மற்றும் அணித்தலைவர் ஹர்பஜன் சிங் ஆகியோர் அது ஆட்டமிழப்பு என வாதிட்டனர். எனினும் அதை நடுவர் ஏற்க மறுத்துவிட்டார்.
அதன் பின்னர் மைதானத்தின் திரையில் அந்தப் பந்து மீள ஒளிபரப்பப்பட்ட போது அக்காட்சியைப் பார்வையிட்ட ஹர்பஜன் சிங் மற்றும் முனாஃப் பட்டேல் இருவரும் திரும்பவும் நடுவருடன் வாதிட்டனர்.
5 நிமிடங்களாக இடம்பெற்ற வாதாட்டத்தின் இறுதியில் குறித்த ஆட்டமிழப்பை மூன்றாவது நடுவரிடம் அனுப்பச் சம்மதித்தார் நடுவர். மூன்றாவது நடுவர் குமார் சங்கக்கார ஆட்டமிழந்ததாகத் தெரிவித்தார்.
குறித்த பந்தில் குமார் சங்கக்கார ஆட்டமிழந்திருந்த போதிலும், நடுவர் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது ஹர்பஜன் சிங் மற்றும் முனாஃப் பட்டேல் இருவரும் நீண்ட நேரமாக கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டது நடுவரின் தீர்ப்பை எதிர்க்கும் குற்றமாகும். இதற்கு தண்டனைகள் எதுவும் விதிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.