மலேரியா குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுக்கும் அபாயம்


மலேரியா நோய்க் கிருமிகள் மருந்துக்கு அழியாமல் போகும் எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகிறது என்றும், இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த வகையான நோய்க்கிருமிகள் முதலில் தென்பட்டிருந்த இடத்துக்கு 800 கிலோமீட்டர்கள் அப்பால் பர்மா தாய்லாந்து எல்லைப் பகுதியில் தற்போது காணப்படுவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேரியா நோயை முற்றுமாக ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் நடந்துவருகின்ற முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம் இது என இந்த புதிய வலுவுடன் பரவ ஆரம்பித்துள்ள மலேரியா நோய்க் கிருமிகளை ஆராய்ந்துவருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000 பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர். மலேரியா நோய்க் கிருமியானது கொசுக்கடி மூலம் பரவுகிறது.

இந்த கிருமிக்கு எதிராக பலகாலமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் மருந்துக்கு கட்டுப்படாமல் போகிற ஒரு தன்மையை இக்கிருமிகளிடையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் தடவையாக கம்போடியாவில் விஞ்ஞானிகள் அவதானித்திருந்தனர்.

அவ்வகையான நோய்க்கிருமி மற்ற மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனாலும் முதலில் காணப்பட்ட இடத்திலிருந்து 800 கிலோமீட்டருக்கு அப்பால் பர்மீய எல்லைப் பகுதியில் தற்போது இவ்வகை கிருமி காணப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பகுதி அதிகம் பேருக்கு மலேரியா பரவுகின்ற ஒரு இடம் ஆகும்.

அர்டெமிஸினின் என்ற இரசாயனக் கலவையை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் மலேரியா நோய்க் கிருமிகளை அழிக்க பயன்பட்டுவந்தன.

ஆனால் மலேரியா கிருமிகளில் தற்போது ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள், அந்தக் மருந்துக்கும் அழியாமல் போகின்ற ஒரு வல்லமையை அக்கிருமிகளுக்குத் தந்துள்ளது.

இது பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரான்சுவா நோஸ்டன், மலேரியாவை ஒழிக்கும் நோக்கில் உலக அளவில் நடந்துவரும் முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவைத் தரலாம் என கூறினார்.

கொசுக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரவுவதனால் மருந்துக்குக்கு கட்டுப்படாத நோய்க்கிருமி பரவுகிறதா அல்லது ஆங்காங்கே இருக்கும் நோய்க்கிருமிகளிலேயே மருந்துக்கு கட்டுப்படாத இந்த தன்மை உருவாகிறதா என்று இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மாதிரியான மலேரியா கிருமி இந்தியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தென்பட ஆரிம்பித்தால், அரசாங்கங்கள், உதவியமைப்புகள் போன்றவை என்னதான் முயன்றாலும் மலேரியாவை முற்றுமாக ஒழிப்பதென்பது இயலாத காரியமாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now