ஐ.நா
மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கிய நான்கு முக்கிய
நாடுகள் ஜுன் மாதத்துடன் விலகிக் கொள்வதால், நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள,
மனிதஉரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் நெருக்கடிகளை
எதிர்கொள்ள நேரிடலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 47 நாடுகள் மட்டுமே உறுப்புரிமை வகிக்க
முடியும் என்பதால், சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு ஜுன மாதத்துடன் ரஸ்யா, சீனா, சவூதி அரேபியா, பங்களாதேஸ்
ஆகிய நாடுகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இவற்றில் ரஸ்யாவும், சீனாவும் சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கமான
நாடுகளாகும். கடந்தமாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு
எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கு இந்த நாடுகள்
கடுமையாக முயன்றன.
குறிப்பாக சீனா, இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கான பரப்புரைகளிலும்
இறங்கியிருந்தது. இந்தநிலையில் வரும் ஜுன் மாதத்துடன் ரஸ்யா மற்றும் சீனா
உள்ளிட்ட சிறிலங்காவுக்கு ஆதரவான நான்கு நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள்
பேரவையில் இருந்து விலகிக் கொள்வது சிறிலங்காவை கவலை கொள்ளச் செய்துள்ளது.
ஜெனிவாவில் வரும் நவம்பர் 1ம் நாள் சிறிலங்கா தொடர்பான மீளாய்வு கூட்டம்
நடைபெறவுள்ள நிலையில் இந்த நாடுகளின் ஆதரவைப் பெறமுடியாத நிலை
சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நாடுகள் மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது போவது
சிறிலங்காவை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றும், ஆனாலும் இந்த நாடுகள்
வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்று நம்புவதாகவும் சிறிலங்கா அரசாங்க
வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.