
இலங்கை அணியின் தலைவராகப் பதவி வகித்த திலகரட்ண டில்ஷான் தொடர் தோல்விகளை அடுத்து அப்பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட இடைவெளிக்கு மஹேல ஜெயவர்தன அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். பதவியேற்கும் போதே 12 மாதகாலத்திற்கு மாத்திரம் தான் அணித்தலைவராகப் பதவியேற்பேன் என அவர் தெரிவித்திருந்தார்.
12 மாதகாலத்திற்கு அணியை வழிநடத்திச் செல்லும் கடமை தனக்குத் தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மஹேல ஜெயவர்தன, அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை பார்க்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இயலுமான விரைவில் இளம் வீரர் ஒருவரைத் தலைவராக வளர்த்து அவரிடம் எவ்வளவு விரைவாக அணித்தலைமையைக் கையளிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அணித்தலைமைப் பொறுப்பைக் கையளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள மஹேல ஜெயவர்தன, இலங்கைக் கிரிக்கெட் அந்த வழியிலேயே செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அணியில் வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, வீரர்களுக்கு தேவையான வாய்ப்புக்கள் வழங்கப்பட்ட பின்னரே அவர்களுக்களைப் பற்றிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
ரங்கன ஹேரத் சிறப்பாகப் பந்துவீசி வருகின்ற வேளையில், அவருக்கு இணையாக இணைந்து பந்துவீசக்கூடிய ஒருவரும் தேவைப்படுவதாக மஹேல தெரிவித்தார். ரங்கன ஹேரத் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் எனத் தெரிவித்த அவர், அவரை நம்பிக் களமிறங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அணித்தலைமையில் தொடர்ந்தும் செயற்பட விரும்பவில்லை என்ற போதிலும், தனது சர்வதேசக் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பாக எந்தவொரு முடிவையும் எடுக்க விரும்பவில்லை என மஹேல தெரிவித்துள்ளார். உலகக்கிண்ணத்தின் பின்னர் தேர்வாளர்களிடம் கலந்துரையாடியதாகவும், ஆறு மாதங்கள் கொண்ட காலப்பகுதியாகப் பிரித்து தனது கிரிக்கெட் வாழ்வை இனி நோக்கவுள்ளதாகவும், அணிக்காகத் தொடர்ந்து பிரகாசிக்கும் ஆவல் காணப்படும் வரை தொடர்ந்து விளையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.