எரிபொருள்களின் விலைகளில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது எனவும் மேற்குலக
நாடுகளில் உருவாகி வரும் பொருளாதார நிலைமைகளின்படி எதிர்காலத்தில்
எரிபொருளின் விலை குறை வடையக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் பெற்றோலிய
வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 131 அமெரிக்க டொலராக
அதிகரித்திருந்தது. எனினும் அது தற்போது 122 அமெரிக்க டொலர் வரை
குறைவடைந்துள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
மேலும், எரிபொருள் கொள்வனவின் போது மேற்குலக நாடுகளாலேயே அதிகளவு
எரிபொருள்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுவரும்
பொருளாதாரப் பின்னடைவு காரணமாக அவற்றின் எரிபொருள் கொள்வனவு நிச்சயமாகக்
குறைவடையும்.
இதனால் அந்த இலாப வாய்ப்பு இலங்கைக்குக் கிடைக்கும் எனவும் அமைச்சர்
மேலும் கூறினார். இதற்கமைய, மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலையும்
குறைவடைவதால் இலங்கையில் எரிபொருள்களின் விலையைப் 10 ரூபாவினால்
குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.