இந்திய
நாடாளுமன்றக்குழு இன்று காலை 10 மணிக்கு வவுனியா, செட்டிகுளம் நலன்புரி
நிலையத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினர். எனினும்
இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர், அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள்
சென்றதால் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த
முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உலங்குவானூர்தி மூலம் வவுனியாவுக்கு சென்ற
அவர்களுடன் மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன், பிரதி அமைச்சர்
விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் வன்னிக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்
சுனந்த பெரேரா உட்பட சிறிலங்கா அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும்
புலனாய்வு பிரிவினர் என பெருந்தொகையானோர் மெனிக்பாம் முகாமுக்கு சென்றனர்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நலன்புரி
நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தின் தாமதம் மற்றும்
எவ்வாறான சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றது போன்றவற்றை இந்திய நாடாளுமன்ற
குழுவினருக்கு விளக்கினார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய
கேள்விகளுக்கு அங்குள்ள மக்களைவிட மாவட்ட அரசாங்க அதிபர் சாள்ஸ்,
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் முரளிதரன், வன்னிக்கட்டளைத்தளபதி சுனந்த
பெரேரா ஆகியோரே பதிலளித்திருந்தனர்.
இந்த சந்திப்புக்களை சிறிலங்கா இராணுவ
புலனாய்வு பிரிவினர் ஒளிப்பதிவு செய்தனர். மீள்குடியேற்றத்தில் உள்ள
தாமதத்திற்கு மிதிவெடி அகற்றப்படாமையே காரணம் என வன்னி கட்டளை தளபதி
தெரிவித்தார்.
தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற
வேண்டும் என்றும் வேறு இடங்களில் தங்களால் மீளக்குடியமர முடியாது என்றும்
அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். மீன்பிடி தொழிலை செய்து வந்த தங்களை
அத்தொழிலை செய்ய முடியாத இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை
எடுக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
வன்னி இராணுவ கட்டளைத்தளபதியால் நலன்புரி நிலையத்தில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரமும் இடம்பெற்றிருந்தது.