
பணம் சேமிப்பது இலகுவன காரியம் அல்ல, கடினமாக இருந்தாலும் சிறியதொரு
தொகையையாவது சேமித்து வைக்கும் போது, அவசர பணத்தேவை ஏற்படும் வேளையில் அது
உங்களுக்கு கை கொடுக்கும்.
உங்களுடைய வருமானம் கிடைத்தவுடன், முதலில் சேமிக்கவேண்டிய தொகையை
எடுத்து வேறாக வைத்துக்கொள்ளுங்கள். எஞ்சியதை மட்டுமே செலவு செய்யுங்கள்.
பணம் சேமிப்பதில் முதல் படி இதுவே.
கண்களுக்கு தென்படும் எல்லா பொருட்களையும் வாங்கும் பழக்கத்தை
விட்டுவிடுங்கள். கடைக்கு சென்றாலும் தேவையான பொருட்களை மட்டும் கொள்வனவு
செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
வருமானத்துக்கு மீறிய செலவுகள் செய்ய பழகிக்கொள்ள வேண்டாம். கடன் வாங்கி
நாளாந்த செலவுகளை மேற்கொள்ள வேண்டாம். கடனட்டை (Credit Card) என்றாலும்
அவசியமான நேரங்களில் மட்டும் பாவிப்பது சிறந்தது. கடனட்டைக்கான மாதாந்த
கட்டணங்களை வட்டி சேர்வதற்கு முன் செலுத்துங்கள்.
நாளாந்த செலவுகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியல்படுத்திக் கொள்ளுங்கள்.
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும்போதோ, வீட்டிற்கு தளபாடங்களை கொள்வனவு
செய்யும் பொழுதோ, அயலில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அல்லது
வீண் ஆடம்பரத்துக்காக தெரிவுகளை மேற்கொள்ளாது, உங்கள் தேவைக்கேற்ப கொள்வனவு
செய்து கொள்ளுங்கள்.
அநேகர் சிகரெட்டிற்கும், மதுபான வகைகளுக்கும் அதிக பணத்தை விரையமாக்குகிறார்கள். இது பற்றி சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
விசேட கொண்டாட்டங்களுக்கென நாங்கள் நினைப்பதை விடவும் அதிகமான பணம்
செலவிடப்படுகிறது. அவ்வாறான செலவுகளை நம் கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருப்பது நல்லது.
பஸ் வண்டியிலோ அல்லது புகையிரதத்திலோ பயணம் செய்வது வெட்கமான காரியம் என்று நினைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் இடவசதியை பொருட்டு, சிறிய முறையில்
மரக்கறி அல்லது பழவகைகளை நடுதல் நல்லது. இது மனதுக்கு இதம் தரக்கூடிய
செய்கையாக அமைவதுடன், புத்தம் புதிய தூய உணவு வகைகளை இலவசமாக பெற்றுக்
கொள்ளும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது.
மாதாந்த மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்ற கட்டணங்களை முடியுமான அளவு குறைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் சேமிக்கும் பணத்தை, உங்களுக்காக உழைக்க செய்ய வேண்டும். அதற்கு நம்பகத் தன்மையான முதலீடுகளில் முதலீடு செய்வதும் நல்லது.
சிறந்த சேமிப்பினை கொண்ட ஒருவரே சிறந்த நிதி ரீதியான ஸ்திர தன்மை கொண்ட ஒருவராக கருதப்படுவார்.
இன்றே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்!

