
இந்திய
கிரிக்கெட்டில் மீண்டும் சூதாட்ட புயல் கிளம்பியுள்ளதுஐ.பி.எல்., தொடரில்
"ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்ட சுதிந்திரா, ஸ்ரீவாஸ்தவ், மோனிஸ் மிஸ்ரா,
அமித் யாதவ், அபினவ் பாலி ஆகிய 5 இந்திய வீரர்கள் "சஸ்பெண்ட்'
செய்யப்பட்டனர்.
பிரபல
இந்தியா "டிவி' சேனல், புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டது. இதில்,
வீரர்கள், நிர்வாகிகள், அணி உரிமையாளர்கள் மற்றும் வெளிநாட்டு கேப்டன்
ஒருவர் மற்றும் இந்திய அணியின் முக்கிய வீரர் ஆகியோர் சூதாட்டம் தொடர்பான
செயல்களில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த
ஐ.பி.எல்., தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீவாஸ்தவ்
"நோ-பால்' வீச ரூ. 10 லட்சம் கேட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்
போர்டு(பி.சி.சி.ஐ.,) விதிமுறைப்படி சர்வதேச போட்டியில் பங்கேற்காத
வீரர்கள், ஐ.பி.எல்., தொடரில் ரூ. 30 லட்சம் தான் கிடைக்கும். ஆனால், புனே
வீரர் மிஸ்ரா தான் ரூ. 1.5 கோடி வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதில்
ரூ. 1.2 கோடி வரை கறுப்பு பணமாக கொடுத்துள்ளனர்.
ஐ.பி.எல்.,
தவிர, உள்ளூர் போட்டியிலும் சூதாட்டம் நடப்பதை, இந்தியா "டிவி'
பகிரங்கப்படுத்தியது. இப்போது, டெக்கான் அணிக்காக பங்கேற்கும் சுதிந்திரா,
கடந்த ஆண்டு நடந்த முதல் தர போட்டி ஒன்றில், "டிவி' நிருபரின்
விருப்பத்திற்கு ஏற்ப, வேண்டுமென்றே "நோ-பால்' வீசியுள்ளார். இவர், ரூ. 60
லட்சம் கொடுத்தால், ஐ.பி.எல்., தொடரில் வேறு அணிக்கு தாவ தயார் என்றார்.
இப்பிரச்னை
குறித்து பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி<.எல்., நிர்வாகிகள் "டெலி
கான்பெரன்சிங்' முறையில் நீண்ட நேரம் விவாதித்தனர். முடிவில், புகாரில்
சிக்கிய ஐந்து வீரர்களும் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இனி இவர்கள்
போட்டிகளில் பங்கேற்க முடியாது. இந்த ஐந்து பேரில், நான்கு வீரர்கள் கபில்
தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) தொடரில்
பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறியது:
இந்தியா
"டிவி'யின் பதிவுகளை பார்த்ததில் வீரர்கள் தவறு செய்திருப்பது
தெரியவருகிறது. இதையடுத்து, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என, பி.சி.சி.ஐ.,க்கு பரிந்துரை செய்தோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்
(ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் ரவி சவானி தலைமையில்,
முதற்கட்ட விசாரணையை துவக்க, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் முடிவு
செய்துள்ளார். இவர்களது "சஸ்பெண்ட்' உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு ராஜிவ் சுக்லா கூறினார்.
யார் அந்த வெளிநாட்டு கேப்டன்
தற்போதைய
ஐ.பி.எல்., தொடரில், ஒரு அணிக்கு கேப்டனாக உள்ள வெளிநாட்டு வீரர் ஒருவரும்
சூதாட்டத்தில் ஈடுபட்டது, புலனாய்வு செய்தியில் தெரிய வந்துள்ளது.
இப்போதைய நிலையில் பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட், டேவிட் ஹசி, டெக்கான்
அணிக்கு சங்ககரா, பெங்களூரு அணியின் வெட்டோரி கேப்டனாக உள்ளனர். இவர்களில்
யார் அந்த கறுப்பு ஆடு என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வீரர்கள் சிக்கியது எப்படி?
புலனாய்வு குறித்து இந்தியா "டிவி' தலைமை ஆசிரியர் ரஜத் சர்மா கூறியது:
கடந்த
ஆண்டு நான்காவது ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் துவங்கிய எங்களது
ஆப்பரேஷன்' 2012, ஏப்ரல் 21 வரை நடந்தது. முதலில் டெக்கான் அணியின்
சுதிந்திராவை அணுகினோம். உள்ளூர், ஐ.பி.எல்., போட்டிகளில் சூதாட்டம்
நடப்பது குறித்த நிறைய தகவல்களை தெரிவித்தார். முதலில் இதை நாங்கள்
நம்பவில்லை. பின், உள்ளூர் போட்டி ஒன்றில், சுதிந்திரா "நோ-பால்' வீசிய
பின் நம்பிக்கை வந்தது.
பஞ்சாப்
அணியின் ஸ்ரீவாஸ்தவை அணுகிய போது, ""ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில்
சூதாட்டத்துக்கு தயாராக உள்ளேன்,'' என்றார். கோல்கட்டா அணியின் ரஜத்
பாட்யா, ராஜஸ்தானின் சமத் பல்லா ஆகிய இருவரும் பணத்துக்காக, "ஸ்பாட்
பிக்சிங்' செய்ய முடியாது என மறுத்தனர்.
புலனாய்வு
குறித்த வீடியோவை, பி.சி.சி.ஐ., யிடம் தரத் தயாராக உள்ளோம். எங்களைப்
பொறுத்தவரையில் வீரர்கள் நேர்மையாக விளையாட வேண்டும். தங்களை மதிக்கும்
ரசிகர்கள் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ரஜத் சர்மா கூறினார்.
ஸ்ரீவாஸ்தவ் மறுப்பு
புகார் குறித்து பஞ்சாப் வீரர் ஸ்ரீவாஸ்தவ் கூறியது:
நான்காவது
ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின் "ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்' பிரிவை
சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் இவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர்.
இப்போதைய அணியில் இருந்து வேறு அணிக்கு, நல்ல தொகையுடன் மாற்றிவிடத்
தயாராக இருப்பதாக கூறினர். இதுதொடர்பாக 50 வீரர்களை சந்தித்துள்ளோம்
என்றனர். இவர்கள் பேசியதாக கூறப்படும் 15 வீரர்களிடம் நானும் பேசினேன்.
"பிக்சிங்'
மற்றும் பணம் எப்படி வருகிறது என்பது குறித்து தான் அதிகம் பேசியதால்,
அனைவருமே சந்தேகப்பட்டனர். தவிர, ஒரு ஓவரில் 20 ரன்கள் விட்டுக்
கொடுத்தால், ரூ. 1 கோடி தரத்தயாராக உள்ளதாக கூறினர். நான் இதை ஏற்கவில்லை.
இவர்களை 7 அல்லது 8 முறை சந்தித்துள்ளேன். புலனாய்வு வீடியோவில் வரும்
குரல் என்னுடையது அல்ல. சூதாட்டத்தில் ஈடுபட்டேன் என்று கூறும் "டிவி'
நிறுவனம், நான் ரூ. 10 லட்சம் கேட்டதாக கூறும் வீடியோவை வெளியிடாதது ஏன்.
இதுகுறித்து அவர்கள் மீது வழக்கு தொடர்வேன். அணி நிர்வாகம், பி.சி.சி.ஐ.,
மற்றும் ஐ.பி.எல்., நிர்வாகத்திடம் தெளிவு படுத்த தயாராக உள்ளேன்.
இவ்வாறு ஸ்ரீவாஸ்தவ் கூறினார்.
எதுவும் பேச முடியாது
டெக்கான்
வீரர் சுதிந்திரா கூறுகையில்,"" வீடியோ பதிவுகளை முழுவதும் பார்க்காமல்
எதுவும் பேச முடியாது. தவிர, தற்போதைக்கு பேசும் நிலையிலும் நான் இல்லை.
இவற்றில் இருந்து விடுபட்ட பிறகு அனைத்தையும் கூறுகிறேன்,'' என்றார்.
கவாஸ்கர் வரவேற்பு
வீரர்களை
பி.சி.சி.ஐ., "சஸ்பெண்ட்' செய்தது குறித்து இந்திய அணியின் முன்னாள்
கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,"" இந்த நடவடிக்கை சரியானது தான். இது
ஐ.பி.எல்., தொடருக்கு மட்டும் அல்லாது, முழு விசாரணையும் முடியும் வரை
தற்காலிக தடை நீடிக்க வேண்டும்,'' என்றார்.
பார்லிமென்டில் கோரிக்கை
இந்திய
வீரர்கள் மீதான சூதாட்ட புகார், பார்லிமென்டிலும் எதிரொலித்தது. நேற்று
"ஜீரோ' நேரத்தின் போது, கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட பல உறுப்பினர்கள்,
புலனாய்வு செய்தி குறித்து முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று
கோரிக்கை விடுத்தனர்.
5 வீரர்கள் விவரம்:
சுதிந்திரா, 28. ம.பி.,
* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), டெக்கான் சார்ஜர்ஸ் (ஐ.பி.எல்.,).
* "நோ-பால்' வீச ரூ. 50 ஆயிரம் பெற்றார்.
*
இந்தூரில் நடந்த உள்ளூர் போட்டியில், சுதிந்திரா வீசிய முதல் ஓவரின்
இரண்டாவது பந்தை, "கிரீசிற்கு' வெளியே அதிகமாக காலை வைத்து வீசினார்.
---
ஸ்ரீவாஸ்தவ், 22, உ.பி.,
* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐ.பி.எல்.,).
* தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் ரூ. 10 லட்சம் கொடுத்தால் "நோ-பால்' வீச தயார் என கூறியுள்ளார்.
மோனிஷ் மிஸ்ரா, 28. ம.பி.,
* டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,), டெக்கான் சார்ஜர்ஸ், புனே வாரியர்ஸ் (ஐ.பி.எல்.,)
*
வீடியோவில் இவர் கூறுகையில்,"" ஐ.பி.எல்., தொடரில், வீரர்களுக்கு பேசியதை
விட அதிக பணம் தரப்படுகிறது. இதை கறுப்பு பணமாக அணி உரிமையாளர்கள்
தருகின்றனர். பி.சி.சி.ஐ., எனக்கு ரூ. 30 லட்சம் நிர்ணயித்தது. ஆனால், ரூ.
1.5 கோடி வரை புனே நிர்வாகம் தந்தது. இதில் ரூ. 1.2 கோடி கறுப்பு பணமாக
கொடுக்கப்பட்டது,'' என்றார்.
அமித் யாதவ், 22. கோவா.
* கிங்ஸ் லெவன் பஞ்சாப் (ஐ.பி.எல்.,)
*
புலனாய்வு வீடியோவில் இவர் கூறுகையில்,"" கடந்த ஆண்டு பஞ்சாப், டில்லி
அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி "பிக்சிங்' செய்யப்பட்டது. இப்போது
பஞ்சாப் அணியில் எனக்கு ரூ. 10 லட்சம் தரப்படுகிறது. ரூ. 20 லட்சம்
கொடுத்தால், வேறு அணிக்கு மாறத் தயார்,'' என்றார்.
அபினவ் பாலி, 26. டில்லி
டில்லி ஜயன்ட்ஸ் (ஐ.சி.எல்.,)
இடது கை
சுழற் பந்து வீச்சாளர். இதுவரை 13 முதல் தர போட்டிகளில் பங்கேற்று, 13
விக்கெட் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 592 ரன்கள் எடுத்துள்ளார். தவிர,
"ஏ' பிரிவு போட்டிகள் 16ல் விளையாடிய இவர், 11 விக்கெட் கைப்பற்றினார்.
தற்போது, ஐ.பி.எல்., தொடரில் எந்த அணியிலும் பங்கேற்கவில்லை.