
எனினும் இந்தப் பயணத்துக்கு முன்னதாக, மகந்த ராஜபக்ச அரசாங்கம்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான
செயற்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு வாய்ப்பில்லை என்று கொழும்பு ஊடகங்கள்
தகவல் வெளியிட்டுள்ளன.
பீரிசின் வொசிங்டன் பயணத்துக்கு முன்னதாக சிறிலங்கா அரசின் செயற்திட்டத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
தம்மிடம் சமர்ப்பிக்க முன்னர் இந்த செயற்திட்டத்தை கொழும்பில் அதை வெளியிட வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான, ஆளும் கூட்டணியில்
அங்கம் வகிக்கும் கடசிகளின் கருத்துகளை அறிந்து கொண்ட பின்னர்
செயற்திட்டத்தை வகுக்க சிறிலங்கா அதிபர் முடிவு செய்திருந்தார்.
ஆனால் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட முக்கியமான
கட்சிகள் தமது கருத்துகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், முன்னதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சே, செயற்திட்டத்தை
தயாரித்து, சிறிலங்கா அதிபரின் ஒப்புதலைப் பெறுவதெனத் திட்டமிடப்பட்டது.
பின்னர், கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டை ஆராய்ந்து
செயற்திட்டத்தைத் தயாரிக்க சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க
தலைமையிலான குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த செயற்திட்டம் தயாரிப்புப் பணி இன்னமும் முடிவடையவில்லை என்பதுடன்,
அமெரிக்கா கேட்டுக் கொண்டபடி, கொழும்பில் வெளியிடப்படவும் இல்லை.
இந்தநிலையில் வெறும் கையுடனேயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இன்று வொசிங்டன் புறப்படவுள்ளார்.
செயற்திட்டம் தயாரிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை குறித்து அமெரிக்காவும் அறிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தவாரம் வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய இராஜாங்கத் திணைக்களப்
பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்துவது தொடர்பான தெளிவானதொரு திட்டத்துடன் தான் பீரிஸ்
வொசிங்டன் வர வேண்டும் என்றும், வெறும் கையுடன் வரக் கூடாது என்றும்
கூறியிருந்தார்.
இந்நிலையில் வெறும் கையுடன் வொசிங்டன் செல்லும் பீரிஸ் ஹிலாரி
கிளின்ரனிடம் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என்றும் கொழும்பு ஊடகங்கள்
சுட்டிக்காட்டியுள்ளன.