
மீதமுள்ள 30 சதவீதத்தில் முஸ்லீம்கள் இந்துக்கள் கிருத்தவர்கள் பரங்கியர்கள் போன்றவர்கள் அடங்குகின்றார்கள். இலங்கையில் இடம் பெற்ற இருபது வருட கால யுத்தம் முடிவுக்கு வந்த பின் நாட்டில் இடம் பெரும் சம்பவங்கள் சிறுபான்மை இனத்தவர்களை அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது.
சிறுபான்மை என்றொன்றே இந்நாட்டில் இல்லை அனைவரும் இங்கு சமமானவர்கள் என்று அடிக்கடி இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் பேசி மகிழ்கிறார். ஆனால் ஆளும் அரசுடன் கூட்டனியாக இருக்கும் இனவாதக் கட்சிகளோ இந்நாடு சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது சிங்களவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு உரிமை கொண்டாடக் கூடாது என வரலாற்றை தவறாகப் பதிய எத்தனிக்கிறார்கள்.
கடந்த ஒரு வருடத்திற்குள் இலங்கையில் நடை பெற்ற அசம்பாவிதங்களை நினைத்துப் பார்த்தால் சிங்கள பேரினவாசதம் இலங்கையை ஆட்கொள்வதை அனைவரும் அறிய முடியும்.
சிலாபம் இந்துக் கோயிலில் பலியிட கொண்டுவந்த ஆடுகள் பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவினால் பலவந்தமாக பரிக்கப்பட்டமை.
முஸ்லீம்கள் குர்பானிக்கு ஆடு மாடுகளை அறுக்கக் கூடாது என்ற தடையை கொண்டுவர மேர்வின் சில்வா உள்ளிட்டவர்கள் கடும் முயற்சி எடுத்தமை.
ஆள் அடையாள அட்டை (ஐடின்டி காட்) க்கு தொப்பி அணிந்த புகைப்படம் முஸ்லீம்கள் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கும் சட்டத்தை கொண்டுவர எத்தனிக்கின்றமை.
முஸ்லீம் பெண்களின் முழு ஆடை தொடர்பிலான சர்ச்சைகளை உண்டாக்கியமை.
தம்புள்ளைப் பள்ளி மற்றும் கோயில்கள் தாக்கப்பட்டமை.
போன்ற பல நிகழ்வுகள் இலங்கையில் சிறுபான்மை மக்களின் இருப்பு கேள்விக் குறியாக்கப்படுவதை படம்பிடித்துக் காட்டுகின்றது.
மனிதனை விட மண்ணுக்குத் தான் முன்னுரிமையா?
இலங்கையின் அரசியல் சாசன சட்டப்படி அனைத்து மக்களும் அவரவர் விருப்பப்படி தங்கள் மதங்களைப் பின்பற்றலாம். அதற்கு யாரும் தடை விதிக்கவோ பிரச்சினைப் படுத்தவோ கூடாது. ஆனால் இன்றைய இலங்கையின் நிலைபாட்டில் கடும் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் தொகை சுமார் 02 கோடி ஆனால் இங்கிருக்கும் புத்தர் சிலைகளை கணக்கிட்டால் அவை 04 கோடியைத் தாண்டுமோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
யுத்த வெற்றிக்குப்ப பின் நாட்டின் வீதிகள் மற்றும் யுத்த சேதங்கள் சீர் செய்யப்படுகின்றதோ இல்லையோ. கண்ட இடத்தில் எல்லாம் புத்தர் சிலை வைக்கப்படுகின்றது. என்பதே உண்மை.
தெருவுக்கு தெருஇ சந்திக்கு சந்தி என்று கண்ட இடத்தில் எல்லாம் புத்தர் முளைத்துவிட்டார்.
குறிப்பாக முஸ்லீம்களின் பள்ளிவாயல் மற்றும் இந்து கோயில்களை மையப்படுத்தியே இந்த சிலை வைப்புகள் அதிகமாக இடம் பெருகின்றன. அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் கிருத்தவ தேவாலயங்களை புத்தர் சிலைகள் அன்மிக்கவில்லை.
மனிதனைக் கூட மதிக்க மறுக்கும் பேரினத்தார் மண்ணுக்கு மாத்திரம் இவ்வளவு மரியாதை கொடுப்பதற்கான காரணம் என்ன?
ஆளும் அரசின் தோழமைக் கட்சியான “ஹெல உரிமைய” சிங்கள பேரினவாதத்தை இலங்கையில் உரம் போட்டு வளர்கின்றது என்ற உண்மை அரசுக்குத் தெரிந்தும் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமைக்கு என்ன காரணம் இருக்கும் என்பதே பொது மக்களின் இன்றைய முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
புத்தரின் போதனைகள் காற்றில் பரக்க விடப்பட்டு புத்தர் சிலைகள் மாத்திரம் தெருவுக்குத் தெரு நடப்படுகின்றது.
கண்ட இடத்தில் எல்லாம் புத்தருக்கு சிலை வைப்பதுதான் புத்த தர்மம் என்றால் அன்பே சிவம் என்ற புத்தரின் வார்த்தையின் உண்மை நிலைதான் என்ன?
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லை வணக்கங்களை நிறைவேற்றும் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. வணக்கத் தளங்கள் உடைக்கப்படுகின்றன. புத்த சிலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இப்படி இலங்கை நாட்டின் பிரச்சினை பரவலாக பேசப்படும் இச்சந்தர்ப்பத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில் தம்புள்ளைப் பள்ளி விவகாரம் மற்றும் புத்தர் சிலை விவகாரங்கள் சூடு பிடிக்கும் என்றே நம்பப்படுகின்றது.
எது எப்படியோ நாட்டில் மக்கள் வாழ்கிறார்களோ இல்லை புத்தர் சிலைகள் மட்டும் உருவாகிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.
லங்கா நவ் ஆசிரியர்
இறைநேசன்