இந்திய
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால் இலங்கையில்
தமிழீழம் மலர்ந்திருக்கும் என்று தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்
மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

“இலங்கை தமிழர்களுக்காக இனி என்ன செய்யப்போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு வீரமணி மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோருடன் உரையாடினேன்.
அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்து விட்டு எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ விடுதலைக்கான டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம்.
ஈழத்தில் உள்ள தமிழர்களுக்காக பணியாற்றுகின்ற அந்த செயலில் ஈடுபட வேண்டும் என்பது இன்றைய தினம் என்னுடைய கோரிக்கையாகும். விரைவில் தனித்தமிழ் ஈழம் ஏற்பட நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்.
இப்போது ஒரு இரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். அன்று தி.மு.க. சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதலமைச்சரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன்.
அப்போது என்னிடம் ராஜீவ்காந்தி; பிரபாகரன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித் தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார்.
இதற்குள் ஏதேதோ தமிழ் நாட்டில் நடந்து விட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ் காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத்தந்திருப்பார்” என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.