
கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி அச்சுவேலி சித்திர வேலாயுத கோவிலில் வைத்து வைரவி சுபாஸ் என்பவருக்கு காயம் விளைவிக்கும் நோக்குடன் அவரை வெட்டிப் படுகொலை செய்ததற்காக சந்தேக நபர்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் அச்சுவேலிப் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த சந்தேக நபர்களான சுந்தரம் இமையக்காந், சுந்தரம் விஜயக்காந், சுந்தரம் விமலக்காந்தன், சுந்தரம் ரஜனிக்காந், சுந்தரம் சிறிக்காந் மற்றும் இவர்களது தந்தையான பொன்னு சுந்தரம் ஆகியோர் இனங்காணப்பட்னர்.
இவர்கள் மீதான வழக்கு அச்சுவேலிப் பொலிஸாரினால் யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணையின் பின்னர் 2005.10.14ஆம் திகதி இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான சுந்தரம் இமையக்காந், குற்றவாளியாகக் காணப்பட்டதற்கு இணங்க வழக்கு தொடுனர் சார்பில் இந்த கொலைக்குப் பயன்படுத்திய கத்தி பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
கொலைக்குப் பயன்படுத்திய கத்தியானது கோவில் வளாகத்திலுள்ள வாழை மரத்தின் கீழ் செருகப்பட்டு இருந்ததாக பொலிஸார் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.
நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் இந்தக் கொலையை இவர் செய்தார் என நிரூபிப்பதற்கு பெரிதும் இது உதவியது என யாழ்.மேல் நீதிமன்றில் கூறிய நீதிவான், இந்த மன்று சுந்தரம் இமையக்காந் என்பவர் வைரவி சுபாஸ் என்பவரை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் இந்த கொலையைச் செய்தார் என நிரூபித்துள்ளது.
இதனால் இந்த மன்று 2, 3, 4, 5, 6 என்ற சந்தேக நபர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நியாயமான குற்றச்சாட்டுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. இதனால் இவர்களை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்வதோடு
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 296 பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய கொலைக்குற்றவாளியாக முதலாவது சந்தேக நபர் சுந்தரம் இமையக்காந் இனம் காணப்பட்டு இருப்பதால் மரண தண்டனை விதிக்க வேண்டியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி நியமிக்கும் இடத்தில் குறித்த திகதியில் இவருக்கு கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடப்பட்டு இவரின் உயிர் பிரியும் வரையும் தூக்கிலிடுமாறு உத்தரவிடுகின்றேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் தனது மரண தண்டனைத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.