
அங்கு அஸ்வர் எம்.பி. மேலும் கூறியதாவது; “மாவை சேனாதிராஜா அவர்கள் இச்சபையில் முன்வைத்துள்ள பிரேரணையின் ஆரம்பத்திலே ‘சொல்லப்பட்ட ஆயுதப் போராட்டம் நடைபெற்ற பொழுது’ எனக் குறிப்பிட்டார். அத்துடன் ‘ஆயிரக்கணக்கான தமிழர்களும் ஏனையவர்களும் வடக்குக் கிழக்கிலுள்ள தமது வதிவிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள்’ எனவும் குறிப்பிட்டார்.
‘ஏனையவர்கள்’ என்று யாரைக் குறிப்பிட்டீர்கள்? அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தவர்களா? கன்னடப் பிரதேசத்தவர்களா? ஏன் உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ எனக் குறிப்பிடுவதற்குக் கூச்சம்? என்று நான் கேட்க விரும்புகின்றேன். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்து அங்கிருந்து எழுபத்தையாயிரம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள்.
இது தங்கள் தாயகம் என்றும் அதில் தாங்களே ஆட்சி நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினார்கள். எங்களுடைய முஸ்லிம்களும் அங்கிருந்தார்கள். மோசமான உடை அணிந்திருந்த அவர்கள் தங்களால் எடுத்துக் கொள்ளக் கூடிய உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்கள்.
இந்தக் கதை உங்களுக்கு நன்கு தெரியும். இது இவ்விதம் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதற்காக கண்டனத்தையோ அந்த மக்களுக்காக கவலையையோ தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் சுஸ்மா சுவராஜ் இங்கு வந்திருந்தார். அவர் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முக்கிய தலைவர்களான சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட பலரையும் சந்தித்தார். இதன்போது நான் இதனை அந்த அம்மாவுக்கு எடுத்துரைத்தேன். 75 ஆயிரம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். உங்களுடைய அரசாங்கம் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடுகளில் ஒரு வீட்டையேனும் முஸ்லிம்களுக்கு கொடுக்க TNA தயாராக இல்லை. இது நியாயம் தானா? இதுவா நீதி? இதுவா அவர்களின் நன்நெறிப் பண்பு?
கெளரவ சம்பந்தன் அவர்களே! நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவராக இருப்பதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் ஓர் சிரேஷ்ட அங்கத்தவர். நான் இதனை திருமதி சுஸ்மா சுவராஜ் முன்னிலை யில் தெரிவித்தேன். முஸ்லிம்கள் வட பகுதியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டபோது TNA தலைவரோ அவரது அணியைச் சேர்ந்த வேறு ஒருவருமோ கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் இன்று அவர்கள் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். எனவே இந்திய அரசாங்கம் நிர்மாணிக்கும் வீடுகளில் ஓரளவு வீடுகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டுமென்று கேட்க விரும்புகிறேன். இதை விட வேறு வழியில்லை.
எந்தவொரு நாட்டு அரசாங்கத்தினாலும் பயங்கரவாதத்தை அடக்கிவிட முடியாது. அந்த அரசாங்கத்திடம் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று கூறினால் அது சாத்தியமாகாது. இப்போதைய நிலைப்பாடு இதுதான்.
சமீபத்தில் நான் திரு.எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் 35வது சிரார்த்த தினத்தில் கலந்து கொண்டேன். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கலாநிதி சிறி பத்மநாதன் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். அவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியராவார். இவர் சிரார்த்ததின உரையை ஆற்றினார்.
அங்கு அவர் இலங்கை தமிழரசுக் கட்சியை கட்டி எழுப்பிய இருவரின் பெயரை குறிப்பிட்டார். அவர்களில் ஒருவர் சொல்லின் செல்வர் திரு.ராஜதுரை ஆகும். அவர் முன்னாள் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராகவும் இருந்தார்.
மற்றவர் கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த இன்னுமொரு சொல்லின் செல்வர் – செனட்டர் எஸ்.இசட்.எம். மசூர் மெளலானாவாகும். அப்போது செனட்டர் மசூர் மௌலானாவிடம் திரு.செல்வநாயகம் அவர்கள், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாசைகளுக்கு உத்தரவாதத்தை அளித்தார்.
திரு.சம்பந்தன் அவர்களே! அது போன்று நீங்களும் உத்தரவாதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி உத்தரவாதம் தர முடியாமல் ஏன் மறுத்து வருகிறீர்கள்? 20 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்து அங்கிருந்து எழுபத்தையாயிரம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள். இது இவ்விதம் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதற்காக கண்டனத்தையோ அந்த மக்களுக்காக கவலையையோ தெரிவிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.