மாவோயிஸ்ட் தமிழக பிரிவு தலைவர் விவேக் பிடிபட்டார். உடன்வந்த மனைவி தப்பியோட்டம்.


Maoists is arrested in Chennai

மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் என சொல்லப்படும் நபர் நேற்று சென்னையில் பிடிபட்டார். மாறுவேடத்தில் ஒரு வீட்டை சுற்றிவளைத்த போலீசார் அதிரடியாக புகுந்து அவரை கைது செய்தனர். எனினும், அவரது மனைவியும் தேடப்பட்டு வந்த தீவிரவாதியுமான இளம்பெண் எப்படியோ தப்பிவிட்டார். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் விவேக், மத்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவர்கள் விவேக்கை மேல் விசாரணைக்காக தேனி மாவட்டத்துக்கு அழைத்து செல்கின்றனர். மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தேடுதல் வேட்டையும் கெடுபிடிகளும் தீவிரம் அடைந்துள்ளதால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தமிழகத்தில் களம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை வேகமாக செய்து வருவதாக தமிழக போலீசுக்கு மத்திய உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் மாநிலம் முழுவதும் குறிப்பாக காட்டு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வந்தனர். உளவுத்துறையின் சிறப்பு பிரிவு ஐஜி ஆபாஷ்குமார், கியூ பிரிவு எஸ்பி சம்பத்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு தொடர்ந்தது.

இந்த நிலையில், மாவோயிஸ்ட் அமைப்பின் தமிழக தலைவர் என கூறப்படும் விவேக் (எ) பாலன் (எ) குமார் (45) ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் சென்னை செனாய் நகருக்கு வந்திருப்பதாக கியூ பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. உஷாரான தனிப்படை போலீசார் மாறுவேடம் அணிந்து செனாய் நகரில் ஒரு இடத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக உள்ளே புகுந்து  விவேக்கை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ‘நான் மாவோயிஸ்ட் தலைவர் இல்லை; இன்னமும் சொல்லப்போனால் என் பெயரே விவேக் இல்லை‘ என்று கூறியிருக்கிறார்.
ஆனால் போலீசார் தங்கள் பாணியில் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்தான் விவேக் என்பது உறுதியானது. கடந்த 2007ம் ஆண்டில் பெரியகுளம் பகுதியில் காட்டுக்குள் பல இலைஞர்களுக்கு தீவிரவாத பாடம் நடத்தி ஆயுத பயிற்சி அளித்தது விவேக்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அப்போது தகவல் தெரிந்து போலீசார் காட்டுக்குள் புகுந்தபோது விவேக் தப்பி ஓடிவிட்டார். சுந்தரமூர்த்தி என்பவர் மட்டும் சிக்கினார். அதிலிருந்து விவேக்கை தேடி வருகின்றனர். முன்னதாக 2004ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு முகாம் நடத்தி ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்து அந்த இடத்தை போலீசார் சுற்றிவளைத்தபோது தீவிரவாதிகள் துப்பாக்கி களால் சுட்டு சண்டை போட்டனர். அந்த மோதலில் சிவா (எ) பார்த்திபன் சுட்டுக் கொல்லப்பட்டார். பத்மா என்ற இளம்பெண் உட்பட பல தீவிரவாதிகள் காயங்களுடன் தப்பிவிட்டனர்.
அதன் பிறகு பத்மாவை விவேக் திருமணம் செய்து கொண்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. சென்னைக்கு அவர்கள் இருவரும் வந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததும், அவர்களை உயிருடன் பிடிக்க ரகசியமாக திட்டம் தீட்டினர். ஆனால் விவேக் மட்டும் சிக்கினாரே தவிர இந்த முறையும் பத்மா தப்பிவிட்டார். பெரியகுளம் நீதிமன்றத்தில் விவேக்குக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரை அங்கு ஆஜர்படுத்த வேண்டும்.
மத்திய உளவுத்துறை போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட விவேக் உடனடியாக தேனிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறார். ஈவு இரக்கம் இல்லாமல் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர்களையும் எம்எல்ஏக்களையும் கடத்திச் சென்று பேரம் பேசும் மாவோயிஸ்ட் அமைப்பு தமிழகத்தில் காலூன்ற ஏற்பாடு செய்யும் தகவலால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now