
தேசிய சேமிப்பு வங்கியில் அப்பாவி பொது மக்களும் ஓய்வுபெற்ற ஊழியர்களும் சிறுவர்களுமே பணம் வைப்பிலிட்டுள்ளதாகவும் அந்த நிதியை தனியார் நிதியென நினைத்து வங்கியால் பயன்படுத்தப்படுவதாக ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கொடுக்கல் வாங்கல்களை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறபோதும் அதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் எனத் தெரியவில்லை என கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருப்பவர் நாட்டின் சட்டத்துறையில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரின் கணவர் எனவும் இந்த கொடுக்கல் - வாங்கல் குறித்து பணிப்பாளர் சபையில் ஒருவரும் பொருளாளர் பிரதிநிதி ஒருவரும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அது செயற்படுத்தப்பட்டமை ஏன் எனவும் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தி பினேன்ஸ் நிறுவனத்தின் பங்கு 30.30 ரூபாவாக இருந்தவேளை 49.74 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டதனால் ஒரு பங்கின் விலை 32 ரூபாவரை அதிகரித்துள்ளதாகவும் இதன்மூலம் வங்கிக்கு 15 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைவரும் பதவி விலக வேண்டும் எனவும் ஏற்பட்ட நட்டத்தை அவர்களே ஈடுசெய்ய வேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான செயல்களால் ஊழியர் சேமலாப நிதியத்தில் நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.