
நோர்வேயின்
முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனும் ஒஸ்லோவில்
நாளை ஒன்றிணைந்து இலங்கை மீது புதிய தாக்குதலைத் தொடுக்கவுள்ளதாக கொழும்பு
ஆங்கில ஊடகமான ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்
புலிகளின் ஆதரவாளர்களும், வெளிநாடுகளில் பல்வேறு அரசியல்கட்சிகளில் உள்ள
அவர்களின் ஆதரவாளர்களும் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் மீளத் தொடங்குவதைக் குழப்பும் சதி
வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கொழும்பு
ஊடகத்திடம் கூறியுள்ளன.
அவர்களின் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியே ஒஸ்லோ கூட்டம் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும்
போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
உண்மையிலேயே நம்பிக்கையிருந்தால், விரோத நடவடிக்கைளை நிறுத்த வேண்டும்
என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
போர்
முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாளை பிற்பகல் 6
மணியளவில் ஒஸ்லோவில் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் ‘இலங்கை:
மூன்றாண்டுகளுக்குப் பின்னர்’ என்ற தலைப்பில் கருத்தமர்வு ஒன்று
இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை நோர்வே தமிழ் கற்கை மையம், தொழிற்கட்சியுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.