டெங்கு
தொற்றை பரப்பும் நுளம்பு இனம் தற்போது தமது வாழ்க்கை முறையை முற்றாக
மாற்றிக்கொண்டுள்ளதாக குடம்பி பரவல் ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொதுவாக இயற்கை சூழலில் 2300 வகையான நுளம்பு இனங்கள் வாழ்கின்றன.
அவற்றில் டெங்கு தொற்றை பரப்பும் நுளம்புகள் அசுத்தமான நீரில் முட்டையிடுவதாக அறியப்பட்டிருந்தது.
அதேவேளை, காலை 6 மணி தொடக்கம் முற்பகல் 10 மணிவரையான காலப்பகுதியிலும், மாலை 4 மணி தொடக்கம் 6 மணிவரையான காலப்பகுதியிலும் அவை செயற்பட்டு மனிதர்களை தீண்டுவதாகவும், பண்டைகாலம் தொட்டு கருதப்பட்டது.
எனினும், தற்போது, டெங்கு நுளம்பு சுத்தமான நீரைக்கொண்ட கிணறுகளிலும், முட்டையிடுவதாக புதிய குடம்பி ஆராய்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது.
இதுதவிர, ஒரு நாளில் எந்தவொரு தருணத்திலும் டெங்கு பரப்பும் நுளம்பு மனிதர்களை தீண்டலாம் என ஆராய்ச்சி குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பின் புதிய வாழ்க்கை முறை மாற்றத்தை கருத்தில் கொண்டு குடம்பி ஆய்வாளர்களினால் ‘டபள் பிளஸ் லீடர்’ என குறித்த நுளம்பு வகைக்கு அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இதுவரைக் காலமும் டெங்கு நுளம்புகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட விதிமுறைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் புதிய ஆய்வுகளில் எதிர்வரும் காலங்களில் மாற்றங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மலேரியா நோய்தாக்கம் தொடர்பாக மக்களை பாதுகாக்கும் வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.