
கர்நாடக
மாநிலம் பிடதி நித்யானந்தா ஆஸ்ரமத்தில், இரண்டாவது நாளாக, போலீசார் சோதனை
மேற்கொண்டனர். ஆஸ்ரமத்தில், பெண் சன்னியாசிகளை வைத்து, ஆபாச படம்
எடுத்ததாக சமூகசேவகர் ஒருவர், போலீசில் ஆதாரங்கள் கொடுத்து பரபரப்பை
ஏற்படுத்தினார்.
பிடதி
நித்யானந்தா ஆஸ்ரமத்தில், சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார்
வந்ததையடுத்து, கர்நாடகா முதல்வர் சதானந்தகவுடா, பிடதி ஆஸ்ரமத்தில்
சோதனையிட்டு, "சீல்' வைக்கவும், நித்யானந்தா ஜாமினை ரத்து செய்து, கைது
செய்யவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று
முன்தினம் மாலையில், பெங்களூரு ராம்நகர் மாவட்ட கூடுதல் கலெக்டர்
அர்ச்சனா தலைமையில், பிடதி ஆஸ்ரமத்துக்குள் சோதனையிட போலீசார் சென்றனர்.
நான்கு மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது.
7 அறைகளுக்கு பூட்டு:
இரண்டாவது நாளாக, நேற்று காலை, 9 மணியிலிருந்து சோதனை துவங்கியது. அதிக
நிலப்பரப்பில் ஆஸ்ரமம் அமைந்துள்ளதால் சோதனை நடத்துவதில் அதிகாரிகள்
திணறினர். ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வீடியோ பதிவு
செய்யப்பட்ட பின்னர், அந்த அறை பூட்டப்படுகிறது. நேற்று முன்தினம், ஏழு
அறைகளில் சோதனையிடப்பட்டு, பூட்டு போடப்பட்டது.
மதுபான பாட்டில், காண்டம்:
சோதனை நடப்பதாக வந்த தகவலையடுத்து, ஆஸ்ரமத்திலிருந்து சில பொருட்கள்
வெளியே வீசப்பட்டுள்ளது. நித்யானந்தா போட்டோக்கள், சி.டி.,க்கள், பெண்கள்
படத்துடன் சி.டி.,க்கள், தமிழ் வார இதழ்கள் கிடந்தன. சில இடங்களில் கஞ்சா,
பீடி, மாத்திரைகள், காலி மதுபான பாட்டில்கள், காண்டம் ஆகியவையும்
கிடந்தது.
நேற்று
காலை, ராம்நகரை சேர்ந்த சமூக சேவகர் நவீன், மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த
புகார் மனுவில், நித்யானந்தா ஆஸ்ரமத்தில் ஆபாசப் படம் எடுக்கப்பட்டது
என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கான சில சி.டி.,க்கள், போட்டோக்கள்,
ஆதாரங்களையும் கொடுத்துள்ளார். இதையடுத்து, அவருடன் போலீசார் பிடதி
ஆஸ்ரமத்துக்குள் சென்றனர். பிடதி ஆஸ்ரமம் அமைந்துள்ள, 42 ஏக்கர் நிலம்,
விவசாய நிலம். இந்த நிலத்தை ஆஸ்ரமம் அமைக்க குறைந்த விலையில் வாங்கி,
சட்டவிரோத செயலில் நித்யானந்தா ஈடுபடுகிறார்.
அடுக்கு
மாடி கட்டடங்கள், "காட்டேஜ்' சொகுசு பங்களா கட்டியுள்ளார். எனவே,
நிலங்களை மீட்டு திரும்ப தர வேண்டும் என, தாசப்பன தொட்டி கிராம மக்கள்,
போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தையடுத்து, விவசாய நிலம் குறித்து சர்வே
எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கூறினார். ஆஸ்ரமத்தில், 20 முதல்
30 கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. என்ன விஷயம் என
ஆஸ்ரமத்திலிருந்தவர்களிடம் போலீசார் கேட்டதற்கு, சாமி விக்ரகங்கள் உள்ளது
என்றனர். கண்டெய்னர்களை சோதனையிடும் போது, பல மர்மம் வெளியாகும் என
தெரிகிறது.
விரைவில் "சீல்':
ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட, 40க்கும் மேற்பட்ட பசு மாடுகளை என்ன
செய்வது என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்ரமத்தில்
கூலி வேலை செய்ய வந்த ராய்ச்சூரை சேர்ந்த, 25 பேர், காலி செய்து சென்றனர்.
ஆஸ்ரமத்தில், 120 சீடர்கள் உள்ளனர். இதில், 50 பேர் வெளிநாட்டவர். அவர்களை
என்ன செய்வது என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். ஆஸ்ரமத்துக்கு சீல்
வைக்க, அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர் என, முதல்வர் சதானந்தா கவுடாவை
சந்தித்து, கன்னட அமைப்பான நவ நிர்மாண் சேனையினர் புகார் மனு அளித்தனர்.
"விரைவில் சீல் வைக்கப்படும்' என, முதல்வர் உறுதியளித்தார்.
அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு:
"நித்யானந்தா ஆஸ்ரம விவகாரம் குறித்து, அரசு விளக்கமளிக்க வேண்டும்' என,
கர்நாடகா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. எப்.ஐ.ஆரை., ரத்து செய்யக்
கோரிய, நித்யானந்தா மனு மீதான விசாரணையை, வரும் 15ம் தேதிக்கு தள்ளி
வைக்கப்பட்டது. நித்யானந்தா, "தன் மீது, பிடதி போலீஸ் ஸ்டேஷனில்
போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்' என, அவரது வக்கீல் ரவி
பி.நாயக் மூலம், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு
தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த
நீதிபதி, அரசு வழக்கறிஞரிடம், "இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா' என,
கேட்டார். அரசு வழக்கறிஞர், "தங்களின் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்ய கால
அவகாசம் வேண்டும்' என, கேட்டார். இதை தொடர்ந்து, நித்யானந்தா மனுவுக்கு,
விளக்கம் கேட்டு, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான
விசாரணையை, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.