குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ரிசாத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அஜித் ரோகண

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ரிசாத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அஜித் ரோகணமன்னார் நீதவானுக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையின் சிறப்பு குழுக்கள் விசாரணைகளை நடத்திவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்பி அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில் பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

நீதவான் ஏற்கனவே வழங்கிய உத்தரவொன்று தொடர்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அமைச்சர் தன்னை அச்சுறுத்தியதாக மன்னார் நீதவான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அதன்படி, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

முன்னைய சந்தர்ப்பங்களிலும் நீதவானுக்கு அமைச்சர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நீதித்துறைச் செயற்பாடுகளில் தலையிட்டிருப்பதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் நீதவானை இடமாற்றுவதற்கான முயற்சிகளிலும் அமைச்சர் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த பின்னணியில், நாட்டின் நீதித்துறையில் அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடுகளைக் கண்டித்து சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளாவிய ரீதியில் நீதித்துறைச் செயற்பாடுகள் முடங்கிப்போயிருந்தன.

இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் உத்தரவு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவை பொலிஸார் பெற்றுள்ளதாகவும், அதன்படி ஆரம்பகட்டமாக தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் ஆராயப்பட்டு, அதன்பின்னர் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதியானால், அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் சில இடங்களில் நடாத்தப்பட்டது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now