உலக தபால் அமைப்பு 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று இந்த அமைப்பில் 150
நாடுகள் உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைய தலைமுறையினர் தபால்
துறையின் மகத்துவம் பற்றி பொருட்படுத்துவதில்லை. ஆனாலும் இன்றும்
லட்சக்கணக்கான மக்களின் தினசரி வாழ்க்கையில் தபால் துறை முக்கிய பங்கு
வகிக்கிறது.
தபால் துறையின் சேவைகளை பாராட்டும் விதமாகவும், தபால் துறையின் திட்டங்கள்
பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஒக்டோபர் 9ம் திகதி
உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அன்று என்ன நடந்தது நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று
நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். இதனால் தற்போது தகவல்களை உடனுக்குடன்
பரிமாறிக் கொள்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன் உலகில் அல்லது
உள்நாட்டில் எதாவது ஒரு இடத்தில் இருப்பவர், தங்களது குடும்பத்தினை தொடர்பு
கொள்ள தபால் துறையை சார்ந்திருந்தனர்.
பழங்ககாலத்தில் புறாவின் கால்களில் கடிதத்தை கட்டி தகவல்கள் அனுப்பப்பட்டன.
மன்னர்கள் ஆட்சியின் போது ஒற்றர்கள் மூலமாக தகவல்கள் பரிமாறப்பட்டன. தபால்
துறை உருவாக்கப்பட்ட பின், தகவல்கள் தபால் துறை மூலமாக உலக முழுவதும்
தகவல்கள் பரிமாறப்படுகின்றன.
கனடா முதல் காரை தீவு வரை கிராமம், நகரம், நாடு வித்தியாசமின்றி மக்களின்
கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. பொது
மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் இ-மெயில் வரவால் குறைந்திருந்தாலும்,
தபால் வழியாக அனுப்பப்படும் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு
சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரையில் 1500 களில் ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும்
1600 களில் ஆண்ட ஒல்லாந்தர் காலத்திலும் தபால் துறையில் போதிய வளர்ச்சிகளோ
அபிவிருத்திகளோ காணப்படவில்லை. 1700 களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே
தபால் துறையில் துரித வளர்ச்சியும் அபிவிருத்தியும் நவீன தொடர்பாடல்
உத்திகளும் ஏற்பட்டன.
குறிப்பாக இலங்கையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியாரின் தகவல் பரிமாற்ற
வசதிக்காக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான ஒரு ஒழுங்கமைக்கப்படாத
தபால் சேவை கெப்டன் ஏ. கென்னடி என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர்
1804 தொடக்கம் 1817ம் ஆண்டு வரை தபால் துறையின் தலைமைப் பொறுப்பிலிருந்த
திரு. ஈ. பிளாட்டமன் அவர்கள் 1815ல் நமது நாட்டில் கொழும்பு, காலி,
மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய ஆறு இடங்களில் அஞ்சல்
அலுவலகங்களை ஆரம்பித்தார். 1832ல் ஆசியாவிலேயே முதல் தடவையாக
கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான குதிரை வண்டித் தபால்சேவை
ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் புகையிரதச் சேவை வந்ததன் பின்னர் முதல் தடவையாக 1865ல்
கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸவுக்கும் இடையிலான தபால் புகையிரத சேவை
உருவாக்கப்பட்டது. 1867ல் தனியாருக்கான தபால் பை, தபால் பெட்டி, சேவைகள்
கொழும்பிலும் கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்டன. 1872 ஓகஸ்ட் 22ல் தான் முதன்
முறையாக தபால் அட்டை வெளியானது.
தற்போது இலங்கை முழுவதும் 609 தபால் அலுவலகங்களும், 3440 உப தபால்
நிலையங்களும், 536 முகவர் தபால் நிலையங்களும், 46 தபால் கடைகளும் இயங்கி
வருகின்றன.
தற்போது கைத் தொலைபேசிகளின் வரவால் தபால் துறைக்கு சற்று பின்னடைவு
ஏற்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, தபால்துறையின் முன் உள்ள
மிகப்பெரிய சவாலாக உள்ளது.