இந்தியா,
இங்கிலாந்து அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்
பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட் போட்டி, ஆமதாபாத்தில் நேற்று துவங்கியது.
"டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங்' தேர்வு செய்தார்.
அசத்தல் துவக்கம்:
இந்திய
அணிக்கு காம்பிர், சேவக் சேர்ந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். வழக்கம்
போல் அதிரடி காட்டிய சேவக், ஆண்டர்சன் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். பின்
பிரஸ்னன் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். முதல்
விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்த நிலையில், சுவான் "சுழலில்'
காம்பிர்(45) போல்டானார்.
அடுத்து
வந்த புஜாரா ஒத்துழைக்க, சேவக்கின் அசத்தல் ஆட்டம் தொடர்ந்தது. சுவான்
பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், டெஸ்ட் அரங்கில் தனது 23வது சதம்
அடித்தார். மறுபக்கம் புஜாரா, இரண்டாவது அரைசதம் கடந்தார். சுவான், பந்தை
"ஸ்வீப்' செய்ய முயன்ற சேவக் 117 ரன்களுக்கு (15 பவுண்டரி, 1 சிக்சர்)
போல்டானார்.
சறுக்கிய சச்சின்:
மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட அனுபவ சச்சின் அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர்,
சுவான் பந்தை தூக்கி அடிக்க, சமித் படேல் பிடிக்க, 13 ரன்களுக்கு நடையை
கட்டினார். "சுழல்' ஜாலத்தை தொடர்ந்த சுவான் வலையில் விராத்
கோஹ்லியும்(19) சிக்கினார்.
இதற்கு
பின் புஜாரா, யுவராஜ் சேர்ந்து பொறுப்பாக ஆடினர். நீண்ட
நாட்களுக்குப்பின், டெஸ்ட் போட்டியில் களம் கண்ட, யுவராஜ் சிங் ஒன்றிரண்டு
ரன்களாக சேர்த்தார். புஜாரா சதத்தை நெருங்கும் நேரத்தில், ஆட்டம்
முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல்
இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது.
புஜாரா (98), யுவராஜ்(24) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் சுவான், 4 விக்கெட் வீழ்த்தினார்.
சச்சின் "23'
நேற்றைய
போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின்,
சர்வதேச கிரிக்கெட்டில் தனது 23வது ஆண்டில் அடி எடுத்து வைத்தார். இவர்,
1989, நவ., 15ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
அறிமுகமானார்.
இது சரியா டிராட்
நேற்று
கோஹ்லி நான்கு ரன்கள் எடுத்த நிலையில், சுவான் வீசிய பந்தை அடித்தார்.
அதனை "ஸ்லிப்' திசையில் நின்ற இங்கிலாந்து வீரர் டிராட் "டைவ்' அடித்து
பிடிக்க முயன்றார். அப்போது பந்து தரையில் பட்டது. இதனை நன்கு அறிந்தும்,
மூன்றாவது அம்பயரிடம் கேட்கும்படி களத்தில் இருந்த அம்பயர்களை வீணாக
வலியுறுத்தினார். இதையடுத்து "ரீப்ளே' பார்க்கப்பட்டது. அதில், பந்து
தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது. இப்படி விளையாட்டு உணர்வு இல்லாமல்
நடந்து கொண்ட டிராட் மீது, "மேட்ச் ரெப்ரி' ரோஷன் மகானாமா நடவடிக்கை எடுக்க
வாய்ப்பு உள்ளது.
இரவு 11 மணி வரை...
சதம் கடந்த சேவக் தனக்கு எதிரான
விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார். இது குறித்து இவர்
கூறுகையில்,""எனது "வீடியோ' நிபுணர் தனஞ்ஜெய்க்கு தான் முதலில் நன்றி
சொல்ல வேண்டும். நான் சதம் அடித்த, கடந்த கால போட்டிகளின் "வீடியோவை'
நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை பார்த்தோம். அதில் முதல் பத்து ஓவர்களை
கவனமாக விளையாடிய போதெல்லாம் சதம் அடித்ததை கண்டறிந்தேன். இதற்கேற்ப
நேற்றும் செயல்பட்டதால், சதம் அடிக்க முடிந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சதம்
அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சிறப்பாக செயல்படுவேன் என்ற
நம்பிக்கை அதிகம் இருந்தது. இன்று புஜாரா சதத்தை பூர்த்தி செய்வார் என
நம்புகிறேன்,''என்றார்.
2 ஆண்டுகளுக்கு பின்...
இந்திய
அணியின் துவக்க வீரர் சேவக், இரண்டு ஆண்டுகளுக்கு பின் சதம் எட்டினார்.
கடைசியாக 2010ல், தற்போது போட்டி நடக்கும் மைதானத்தில் நியூசிலாந்துக்கு
எதிராக 173 ரன்கள் எடுத்தார். இதன் பின் தொடர்ந்து 30 இன்னிங்சில் சதம்
அடிக்காமல் இருந்தார். நேற்று 31வது இன்னிங்சில் சதம் அடித்தார். தனது
99வது டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், 117 ரன்கள் எடுத்து அசத்தினார்.
*
இங்கிலாந்துக்கு எதிரான டிரன்ட் பிரிட்ஜ் டெஸ்டில் (2002) 106 ரன்கள்
எடுத்த சேவக், இந்த அணிக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை (117 ரன்கள்)
நேற்று பதிவு செய்தார்.
* காம்பிருடன் சேர்ந்து சேவக் சேர்த்த 134 ரன்கள் தான், இம்மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.
* துவக்க வீரராக இருந்து அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் கவாஸ்கருக்கு (33) அடுத்த இடத்தில் சேவக் (23) உள்ளார்.
*
இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் (22
சதம்), கவாஸ்கர் (16), டிராவிட்டுக்கு (15) அடுத்து நான்காவது இடம்
பிடித்தார் சேவக் (13). இதில் அதிக சராசரி (58.35) வைத்துள்ளது சேவக்
தான்.
புஜாரா "பெஸ்ட்'
ஐந்தாவது
டெஸ்டில் பங்கேற்கும் புஜாரா, நேற்று தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு
செய்தார். தவிர, இது இவரது இரண்டாவது அதிகபட்ச (98*) ஸ்கோர். இதற்கு முன்
இந்த ஆண்டு ஐதராபாத் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக 159 ரன்கள்
எடுத்திருந்தார்.
*
இவரும், சேவக்கும் இணைந்து சர்தார் படேல் மைதானத்தில் இரண்டாவது
விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (90) சேர்த்த இரண்டாவது ஜோடி என்ற பெருமை
பெற்றது. இதற்கு முன் சேவக், டிராவிட் ஜோடி 2010ல் 237 ரன்கள் சேர்த்து
முதலிடத்தில் உள்ளது.
"சூப்பர்' ஜோடி
சேவக்கும்,
காம்பிரும் சேர்ந்து 2010, டிசம்பரில் தென் ஆப்ரிக்காவின் செஞ்சுரியன்
மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்திருந்தனர். 16
இன்னிங்சிற்கு பின், நேற்று தான் இந்த ஜோடி, "பார்ட்னர்ஷிப்பில்' சதம்
(134) அடித்தது.
* முதல் விக்கெட்டுக்கு இவர்கள் சதம் அடிப்பது, 11வது முறை. சர்வதேச அளவில் அதிக சதம் அடித்த ஜோடி வரிசையில் ஐந்தாவது இடம் பெற்றது.
வெஸ்ட்
இண்டீசின் கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ் (16 சதம்), இங்கிலாந்தின் ஜாக்
ஹாப்ஸ்-ஹெர்பெர்ட் (15), ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர்-ஹைடன் (14),
இங்கிலாந்தின் அலெஸ்டர் குக்-ஸ்டிராஸ் (12) ஜோடி முதல் நான்கு இடங்களில்
உள்ளது.
காம்பிர் "2000'
நேற்று
காம்பிர் 37 ரன்கள் எடுத்த போது, இந்திய மண்ணில் டெஸ்ட் அரங்கில் 2000
ரன்களை கடந்தார். மொத்தம் 29 டெஸ்டில் 2008 ரன்கள் எடுத்துள்ளார்.
சொதப்பல் "பீல்டிங்'
நேற்று
இங்கிலாந்து அணியின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. சேவக் 80 ரன்கள்
எடுத்த போது கொடுத்த "கேட்ச்சை' பிரையர் நழுவ விட, 117 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து சொதப்பிய பிரையர், காம்பிரை (45 ரன்கள்) "ஸ்டம்பிங்' செய்யும்
வாய்ப்பையும் கோட்டை விட்டார்.
* புஜாரா 8 ரன்கள் எடுத்த போது அடித்த பந்தை, தவறாக கணித்த ஆண்டர்சன், "கேட்ச்' பிடிக்காமல் ஏமாற்றினார்.
* 4 ரன்னில் இருந்த விராத் கோஹ்லி கொடுத்த வாய்ப்பை, டிராட் கோட்டை விட்டார் (67வது ஓவர்). பின், இவர் 19 ரன்கள் எடுத்தார்.