பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை கொல்பவருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஜம்ஹூரி வத்தன் கட்சி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான்
முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கொலை செய்யத் தகுதியானவர் என்று அவருக்கு
எதிராக 36 உலமாக்கள் ஏற்கனவே பத்வா கொடுத்துள்ளனர். இந்நிலையில் முஷாரப்
விரைவில் பாகிஸ்தான் வரவிருக்கிறார். பாகிஸ்தான் வரும் முஷாரபை கொல்லும்
நபருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஜம்ஹூரி வத்தன் கட்சி தலைவர்
தலால் அக்பர் பக்டி அறிவித்துள்ளார்.
முஷாரபை யார் கொல்கிறாரோ அந்த நபருக்கு
ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும். அந்த நபர் தான் எங்கள் ஹீரோ. அக்பர் கான்
பக்டி மற்றும் இஸ்லாமாபாத்தின் லால் மஸ்ஜிதில் அப்பாவி பொது மக்களைக்
கொன்றதற்காக அவருக்கு எதிராக 36 பேர் அடங்கிய உலமா இ இக்ரம் பத்வா
கொடுத்தது.
இப்படி அப்பாவி மக்களைக் கொன்ற முஷாரபைக்
கொல்பவருக்கு குவெட்டாவில் ரூ.10 கோடி மதிப்புள்ள வியாபார இடம் பரிசாக
வழங்கப்படும். அதுவும் கொலை நடந்த 72 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்
என்றார்.
தலால் அக்பர் பக்டி கொலை செய்யப்பட்ட அக்பர் கான் பக்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வந்தால் தனக்கு என்னவாகும் என்ற பயத்தில் இருக்கும் முஷாரபுக்கு இந்த அறிவிப்பு நிச்சயம் பேரதிர்ச்சியாக இருக்கும்.