
இந்திய வெளி விவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவ்வேலை அவருடன் பல அரசியல் பிரமுகர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றார்கள்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்ரஸ் ஆகியவற்றின் பேச்சுவார்த்தைகள் புத்தி ஜீவிகளின் கவணத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்ரஸ் ஆகியவற்றின் பேச்சுவார்த்தைகள் புத்தி ஜீவிகளின் கவணத்தை ஈர்த்துள்ளது.
இலங்கை முஸ்லீம்கள் மதத்தால் இஸ்லாமியர்களாக இருந்தாலும் மொழியால் தமிழர்களாக இருக்கிறார்கள். தமிழர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இலங்கை முஸ்லீம்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.
ஆனால் முஸ்லீம்களுக்கும் சேர்த்து உரிமை வாங்கிக் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்று அன்று முதல் இன்று வரை விடுதலைப் புலிகளின் அதே பல்லவியை த.தே.கூ கூறி வருவதை இனிமேலும் முஸ்லீம் சமுதாயம் நம்பத் தயாரில்லை என்பது தற்போதைய அரசியல் நகர்வுகளில் இருந்து தெரிய வருகிறது.
ஆம் எஸ்.எம். கிருஷ்ணாவின் வருகையின் முக்கிய அம்சமாக த.தே.கூட்டமைப்பு அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியதைப் போல் மு.கா வும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் மு.கா. பிரதிநிதிகளுக்குமிடையில் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தெரிய வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் செயலாளர் நாயகம் ஹசன் அலி பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் கல்முனை பிரதிமேயர் நிசாம் காரியப்பர் சட்டத்தரணி பாயிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தாவும் கலந்து கொண்டார்.
இப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் மக்களை இனப்பிரச்சினை தீர்வில் உள்ளடக்க வேண்டும். அவர்களது கோரிக்கையில் நியாயம் உள்ளது என இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஏற்றுக்கொண்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இவ்விடயத்தை ஜனாதிபதியினதும் உரியவர்களினதும் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்ந்துவரும் பகுதிகளில் தமிழ் முஸ்லிம் உறவுகளை அடிப்படையாக வைத்தே தீர்வு அமையவேண்டும். இந்த அடிப்படையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது என்று மு.கா. அவரிடம் கூறியுள்ளது.
எஸ்.எம் கிருஷ்ணா 13 வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். அத்துடன்இ இனப்பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம்களது தனித்துவம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கும் நியாயமான பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
எது எப்படியோ முஸ்லீம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இனப்பிரச்சினைத் தீர்வில் மூன்றாம் பங்காளிகளாக முஸ்லீம்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதுதான் முஸ்லீம் மக்களின் கோரிக்கையாக உள்ளது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.
