இணையத்தளங்களை நடத்துவதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் அதிகாரம் ஊடக, தவகல்துறை அமைச்சிற்கு இருக்கிறதென்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, இவ்வமைச்சு இப்போது இணையத்தளங்களுக்கு தொடர்ந்தும் அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருகின்றது.
அனுமதிப்பத்திரம் வழங்கும் உரிமை ஊடக தகவல்துறை அமைச்சிற்கு இருக்கக்கூடாதென்று 5 இணையத்தளங்கள் தாக்கல் செய்த 5 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.அமைச்சிற்கு கிடைத்த 80 விண்ணப்பங்களில் இருந்து விண்ணப்பதாரிகளை அழைத்து நேர்முக பரீட்சைகளை நடத்திய பின்னர் இப்போதைக்கு 41 விண்ணப்பதாரிகளுக்கு இணையத்தளங்களை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதென்று தீர்மானித்துள்ளது.
ஊடக தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நாளை வெள்ளிக்கிழமை 13ஆம் திகதியன்று இந்த 41 விண்ணப்பதாரிகளுக்கு இணையத்தளங்களை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரங்களை கையளிப்பார். இந்த இணையத்தளங்களை உலகில் எந்த நாட்டில் இருந்தும் செயற்படுத்துவதற்கு உரிமை இருந்தாலும், அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் இலங்கையில் தகவல், ஊடக அமைச்சிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட இணையத்தளம் ஏதாவது தேசத்துரோக அல்லது தனிப்பட்டவர்களை அவமதிக்கக்ககூடிய வகையில் தகவல்களை எழுதினால் அந்த உள்ளூர் பிரதிநிதிக்கு எதிராகவே அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ முடியுமென்று ஊடக தகவல்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல தெரிவித்தார்.