வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்


1990இல் உலகில் எந்தவொரு மனித இனத்திற்கும் ஏற்படாத மனிதப் பேர வலம் எமது சமூகத்திற்கு இனவாதி களால் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஏறத்தாழ 25000 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தம் தாயகப் பகுதிகளிலிருந்து பொருட்கள் உடைமைகள் யாவும் பறிக்கப்பட்ட நிலையில் துடைத்தெறியப்பட்டனர். அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசும் அக்கால ஜனாதிபதியும் முஸ்லிம் அமைச்சர்களும் இதனைத் தடுப்பதற்கு எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஐரோப்பிய நாடுகள், கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சர்வதேச மன்னிப்புச்சபை தமிழ்த்தலைவர்கள், இந்து, கிறிஸ்தவ சமயத் தலைவர்கள், புனித பாப்பரசர், யப்பானின் விசேட அதிதி யசூசி அக்காசி, ஐ.நா. விசேட பிரதிநிதி நம்பியார், ஐ.நா. மனித உரிமைப்பணிப்பாளர் நவநீதம் பிள்ளை போன்ற அனைவரும் எமது மக்கள் விடயத்தில் மாற்றான்தாய் மனப்பாங்குடனே நடந்துள்ளனர். 


ஏறத்தாழ 21 வருடங்கள் அந்நிய மண்ணில் கழிப்பதென்றால் எவ்வளவு பெரிய அவலம் என்பதை மனச்சாட்சியுள்ள எந்தவொரு மனிதனும் ஏற்றுக் கொள்வான். நிலைமை இவ்வாறு இருக்கையில் இராணுவ நடவடிக்கை மூலம் அகதிகளாகிய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களை உடனே மீள்குடியேற்றுமாறு இந்தியா, மேற்கு நாடுகள், அமெரிக்கா, சர்வதேச அமைப்புக்களும், தமிழ்த் தலைவர்களும், ஊடகங்களும் கூப்பாடு போட்டனர். இவர்களை குடியேற்ற வேண்டுமென்பதில் எமக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஏன் இவர்கள் 21 வருடங்களாக அகதி முகாம்களில் 10 பேர்ச் நிலப்பகுதிக்குள் அடைபட்டு அவல வாழ்வு வாழும் வட புல முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கவில்லை. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளக்கூடியது பாதிக்கப்பட்டவர் முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு மனித உரிமை இல்லை என்று அவர்கள் கருதுகின்றனரோ என்னவோ தெரியவில்லை. 

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் சில உயர் அரச அதிகாரிகள் மாற்றாந்தாய் மனப்பாங்குடனும், பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக அமைச்சர்களும், மக்களும் பத்திரிகைகளில் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த 21 வருடங்களாக வட மாகாணத்தின் பல்கலைக்கழக அனுமதி, தொழில் வாய்ப்புகள், அபிவிருத்தித்திட்டங்கள், காணிக் கச்சேரிகள், திணைக்கள உயர் பதவிகள் யாவற்றையும் தமிழ் மக்கள் மாத்திரமே தனியாக அனுபவித்தனர் என்பதை மனச்சாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர். 


கடந்த காலங்களில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக மர்ஹூம் மக்பூல் அவர்கள் செயற்பட்டுள்ளமையையும், மாவட்ட நீதிபதிகளாக அப்துல்லா, மொகிடீன் போன்றோர்களும் பணியாற்றிய போதும் வலயக்கல்விப் பணிப்பாளர்களாக அப்துல் ஹக், கே.எம். பஸீர் போன்றோர் பணியாற்றியபோதும் எவ்வித தமிழ், முஸ்லிம் பாரபட்சமான கருத்துக்களும்; அப்போது ஏன் எழவில்லை என்பதும் சிந்திக்கத்தக்கது. 

இன்று வடமாகாணத்திலுள்ள திணைக்களத் தலைவராகவோ வைத்திய அத்தியட்சகராகவோ, வலயக்கல்வி அதிகாரியாகவோ ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டால், அல்லது முஸ்லிம்களுக்கு அரச காணி வழங்கப்பட்டால் அதனை இனச்சாயம் பூசி ஆர்ப்பாட்டம் என்றும் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டுமென்றும் சில சுயநல அரசியல்வாதிகள் தம் இலாபத்திற்காக மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதனைக் கைவிட்டு முஸ்லிம் மக்களின் உள்ளங்களை வெல்லும் நடவடிக்கையில் தமிழ் அரசியல்வாதிகள் ஈடுபட வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான காலம் கனிந்துவரும் இவ்வேளையில் முஸ்லிம்களின் ஆதரவும் மிகவும் இன்றியமையாததாகும். 


முஸ்லிம் மக்களும் வடக்கின் பூர்வீகக் குடிகள். மொழிரீதியாக தமிழ் மக்களுடன் ஒன்றித்தவர்கள் என்பதைப் புரிந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோமாக. வடபுலத்தில் பிறந்த எந்தவொரு இலங்கை குடிமகனின் மீள் குடியேற்றத்தையும் தடை செய்ய யாருக்கும் எவ்வித உரிமையும் இல்லை என்பதை அவ்வதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். உரிமைக்காக போராடும் ஒரு சமூகம் தன்னைவிட சிறுபான்மையான இம்மக்கள் விடயத்தில் கடந்த காலத்தில் விட்ட தவறுகளைத் திருத்திக் கொண்டு நடந்து கொள்ள வேண்டும். 

மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்துள்ளதாகவும், விரைவில் மீள்குடியேற்ற அமைச்சு கலைக்கப்படவுள்ளதாகவும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. அப்படியாயின் 1990 இல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஏறத்தாழ 25,000 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்களின் நிலை என்ன? அண்மையில் மடு வீதியில் திறந்து வைக்கப்பட்ட வீடமைப்புத் திட்ட நிகழ்வில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பஷில் ராஜபக்ஷ அவர்கள் தெட்டத்தெளிவாக வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருப்பது இம்மக்களின் நெஞ்சங்களில் பால் வார்த்ததைப்போல அமைந்துள்ளது.


அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் ஜனாதிபதியின் ஆலோசகரும் வடமாகாண மீள்குடியேற்ற அணித் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய கௌரவ பஷில் ராஜபக்ஷ அவர்களும், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் கௌரவ ரிசாட் பதுயுதீன் அவர்களும், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அமைச்சர் ரவூப் ஹக்கீம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக், பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாறூக் ஆகியோர் இணைந்து ஷஷவடபுல முஸ்லிம்களை விரைவில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது வடபுல முஸ்லிம்களுக்கு ஒரு ஆறுதலைத்தருகின்றது.

இம்மக்களை வடக்கில் விரைவில் குடியேற்றப்படுகின்றபோது இம்மக்கள் மேலும் மேலும் அரசின் கரங்களை பலப்படுத்துவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எமது தாயகத்தை மீட்டுத்தந்த அரசுக்கும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கும் என்றும் பக்கபலமாக இருந்து செயற்பட வேண்டியது ஒவ்வொரு வடபகுதி முஸ்லிம்களின் கடமையுமாகும்.

- கே.சி.எம். அஸ்ஹர் BA (Hons) PGDE, J.P.
e-mail: ashharmusaliur@yahoo.com
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now