மாத்தறை பிரதேசத்தில் நிதிநிறுவனம் ஒன்றில் கப்பம் பெற்ற வெலிக்கடை
சிறைக்கைதி தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.கையடக்கதொலைபேசி மூலம் நிதிநிறுவனத்தின் முகாமையாளரை தொடர்புகொண்டு மரண அச்சுறுத்தல் விடுத்து குறித்த கைதி கப்பம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கப்பம் பெறும் முயற்சியில் வெலிக்கடை சிறைச்சாலையைச் சார்ந்த இரண்டு நலன்புரி உத்தியோகத்தர்களும் உடந்தையாக இருந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தகவ் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, குறித்த இரண்டு நலன்புரி உத்தியோகத்தர்களும், மேலும் ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் வடக்கில் தமிழ் குடும்பங்களிடமிருந்து பாரியளவில் கப்பம் பெற்றுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை கொலை செய்வதாக அச்சுறுத்தியும், தாம் ஓர் புலனாய்வு உத்தியோகத்தர் எனவும் தெரிவித்து இவ்வாறு கப்பம் பெறப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களிடமே அதிகளவான கப்பப் பணம் பெறபட்டுள்ளது.
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு போகம்பரை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரே இவ்வாறான கப்பம் பெறும் கும்பலை வழிநடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
முல்லைத்தீவு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தி அவர் உதவியுடன் பிரதேச மக்களிடம் இவ்வாறு கப்பம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த ஒன்றரை வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கப்பம் பெறும் கும்பல் தொடர்பான சகல தகவல்களும் வெளியாகியுள்ளன.
