இலங்கையில் யுத்தம் நடந்த வடபகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ஒப்பந்தக் கம்பனி தமக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் முறையிட்டுள்ளார்கள்.
வசதிகள் எதுவுமின்றி தாங்கள் தொழில் புரிய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான 136 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது ஓமந்தை பகுதியில் இடம்பெற்று வருகின்றன.
இதன் ஆரம்ப கட்டமாக, ரயில்பாதைக்குரிய அடித்தள மண் வீதி அமைக்கும் வேலைகளில் உள்நாட்டுத் தமிழ், சிங்கள தொழிலாளர்களும் இந்தியர்களும் உட்பட 800 பேர் வரையில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.
வாகன சாரதிகள் தமக்கு நேர்முகத் தேர்வின் போது உறுதியளிக்கப்பட்ட சம்பளத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.
இந்தியத் தொழிலாளர்களின் வசதிகள், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் ஒப்பிடும்போது, உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஜனாதிபதி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில் ஆணையர் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் இதுவரை தமக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உறுதி செய்யப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, தொழிலாளர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கையில் ரயில் பாதைகளை அமைக்கும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற டுஇர்க்கோன்டு என்ற இந்திய அரசின் போக்குவரத்து கட்டுமானப் பணிகளுக்கான சர்வதேச நிறுவனம் நிராகரிக்கின்றது.