ஐ.பி.எல்.
(இந்தியன் பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு
அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் போட்டி நடைபெற்று
வருகிறது.
முதல் 3 ஐ.பி.எல். போட்டியிலும் 8 அணிகள் பங்கேற்றன. 2008-ம் ஆண்டு
நடந்த முதல் ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 2-வது
ஐ.பி.எல். போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 3-வது ஐ.பி.எல்.
போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றன.
கடந்த ஆண்டு நடந்த 4-வது ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ், கொச்சி
டஸ்கர்ஸ் கேரளா ஆகிய 2 புதுமுக அணிகள் கலந்து கொண்டன. 10 அணிகள் பங்கேற்ற
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த ஆண்டுக்கான 5-வது ஐ.பி.எல் 20 ஓவர் போட்டி சென்னையில் வருகிற
4-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. மே 27-ந்தேதி வரை இந்தப் போட்டி
நடக்கிறது. இதில் 9 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு விளையாடிய கொச்சி
அணி விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டது.
சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், புனே,
மொகாலி, பெங்களூர், விசாகப்பட்டினம், தர்மசாலா, கட்டாக் ஆகிய 12 நகரங்களில்
இந்தப் போட்டி நடக்கிறது. ஐ.பி.எல்.போட்டியின் கோலாகல தொடக்க விழா
சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு
தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி
கேத்தி பெரி கலந்து கொள்கிறார். அவர் பாடலுடன் நடனமாடி சென்னை ரசிகர்களை
கிறங்கடிக்க செய்வார்.
ஹாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
பிரபல இந்தி கவிஞர் பிரசூன் ஜோஷியன் கவிதையை அவர் வாசிக்கிறார். தொடக்க
விழாவில் 9 அணிகளின் கேப்டன்களான டோனி (சென்னை), தெண்டுல்கர் (மும்பை),
ஷேவாக் (டெல்லி), காம்பீர் (கொல்கத்தா), கங்குலி (புனே), டிராவிட்
(ராஜஸ்தான்), கில்கிறிஸ்ட் (பஞ்சாப்), சங்ககரா (டெக்கான்), வெட்டோரி
(பெங்களூர்) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கேப்டன்களின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் நடத்துகிறார்.
தொடக்க விழாவில் பிரபுதேவாவின் நடனம் நடக்கிறது. அவர் 2 பாடல்களுக்கு நடனம்
ஆடுவார் என்று தெரிகிறது. அதோடு பாப் இசைப்பாடகி கேத்தே பெரியுடன்
இணைந்தும் நடனம் ஆடுவார். மேலும் நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா,
நடிகர் சல்மான்கான் ஆகியோரும் ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்று நடனம்
ஆடுகிறார்கள்.