கல்வி அமைச்சில் இருந்து
வழங்கப்பட்டது போன்ற போலியான நியமனக் கடிதங்களை வழங்கி பட்டதாரி நியமனம்
பெற முனைந்த மோசடி ஒன்று அம்பலமாகி உள்ளது.
இவ்வாறான போலி நியமனக் கடிதங்களுடன் அண்மைய நாள்களில் 9 பேர் பாடசாலைகளில் இணைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. உறுதியான எண்ணிக்கை தெரியவரவில்லை. இத்தகைய கடிதத்துடன் பெண் ஒருவர் பாடசாலையில் இணைந்திருந்தார் என்பதை உதயன் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த மோசடி பற்றித் தன்னிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார். உயர் கல்வி அமைச்சினது போன்றே தயாரிக்கப்பட்ட போலியான கடிதத் தலைப்பில், தனித் தமிழில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 6.12.2011 திகதியிட்ட இந்தக் கடிதத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம்.குணசேகர என்பவரின் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தைச் சமர்ப்பித்து கடந்த வியாழக்கிழமை யாழ். வண்ணை நாவலர் பாடசாலையில் பெண் ஒருவர் இணைந்துள்ளார். அவரது நியமனக் கடிதத்தில் சந்தேகம் கொண்ட அதிபர் அது பற்றி விசாரித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பெண் பாடசாலைக்கு வருவதை நிறுத்திவிட்டார். அவரிடம் கல்வித் திணைக்களத்தினர் விசாரித்ததில் தனக்குத் தெரிந்தவரையில் 9 பேருக்கு இந்த வகையிலான நியமனம் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அவர் சமர்ப்பித்த நியமனக் கடிதத்தில் பல தவறுகள் இருப்பதை மாகாணக் கல்வித் திணைக்களம் கண்டறிந்துள்ளது. பாடசாலை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் மாகாணக் கல்வித் திணைக்களத்தாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஒருபோதும் உயர் கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்படுவதில்லை. போலி நியமனக் கடிதங்கள் உயர் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டுள்ளன. கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயலாளரின் பெயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உரியதே தவிர, உயர் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உரியதல்ல. போலி நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பள அளவுத் திட்டம் புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு உரியதல்ல. கடிதத் தலைப்பில் உயர் கல்வி அமைச்சு என்பதற்கான ஆங்கிலப் பதம் வழக்கமாக அந்த அமைச்சுப் பயன்படுத்துவதை ஒத்திருக்கவில்லை. வழக்கமான அரச நியமனக் கடிதங்களுக்கு முற்றிலுமான மாறான வடிவத்தில் தனித் தமிழில் போலிக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பிரதிகள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கோ மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கோ கிடைக்கவில்லை. அது தவிர அண்மைக் காலத்தில் ஆசிரிய நியமனங்கள் எதுவும் அரசாலோ அமைச்சாலோ மேற்கொள்ளப்படவில்லை என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்தது. இந்தப் போலி நியமனக் கடிதப் பிரதி உயர் கல்வி அமைச்சுக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலியான கடிதங்களைத் தயாரித்து சிலர் நியமனம் பெற முயற்சித்தார்களா அல்லது பணத்தைப் பெற்றுக் கொண்டு யாராவது மோசடியில் ஈடுபட்டார்களா என்ற கோணங்களில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். |
