
இந்த வருட முடிவுக்குள் கொழும்பில்
இருந்து மாங்குளம் வரையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே
திணைக்களம் நம்பிக்கை தெரிவித்தது. யுத்தத்தினால் அழிவடைந்த வட பகுதிக்கான
ரயில்பாதைகளை மீளமைக்கும் பணிகள் இந்திய இர்கொன் கம்பனியினால்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணிகளை சீரமைத்தல், மட்டப்படுத்துதல்
போன்ற பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கட்டம் கட்டமான வட
பகுதிக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே
வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில்பாதை மீளமைக்கப்பட்டுள்ளன.
ஓமந்தையில் இருந்து மாங்குளம் வரையான ரயில்பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக
மேற்கொள்ளப்படுகின்றன. இதே வேளை மதவாச்சியில்இருந்து தலைமன்னார் வரையான
ரயில்பாதையை மீளமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே
திணைக்களம் கூறியது.
வட பகுதி ரயில் பாதைகளை மீளமைப்பதற்கு
இந்திய அரசு கடனுதவி வழங்கியுள்ளது. தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை
வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 2014ல் நிறைவு செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாரில்
இருந்து வவுனியா வரை ரயில்பாதை நிர்மாணிக்காது வவுனியாவில் இருந்து மேல்
நோக்கி ரயில்பாதை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே திணைக்களம்
இர்கொன் நிறுவனத்தை கோரியுள்ளது.