
குருநாகல் மாவட்டத்திலுள்ள பிங்கிரிய
பிரதேசத்தில் இருக்கும் கோழிப் பண்ணையொன்றில் சளிச் சுரத்தையொத்த நோய்
காரணமாக கோழிகள் உயிரிழந்துள்ளன. அதனால் அக்கோழிப் பண்ணை ‘சீல்’ வைத்து
மூடப்பட்டிருப்பதாக மிருக வளர்ப்பு மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின்
பணிப்பாளர் நாயகம் டொக்டர் டபிள்யூ.கே.த.சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
இதன் விளைவாக இப்பண்ணையிலுள்ள சுமார்
ஐயாயிரம் கோழிகள் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சட்டப்படி இன்று 2ஆம் திகதி
அழிக்கப்படும். பண்ணையின் உரிமையாளருக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும் என்றும்
அவர் கூறினார்.
அதேநேரம், இப்பண்ணையிலுள்ள
கோழிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக நேற்று ஐக்கிய
இராச்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்
குறிப்பிட்டார்.இதேவேளை, இப்பிரதேசத்திலுள்ள கோழிப் பண்ணைகளில் எமது
மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்தும் பரிசோதனையை மேற்கொண்டு வருவதாகவும் அவர்
கூறினார்.
கோழிகள் உயிரிழந்த பண்ணையிலிருந்து
பெறப்பட்டுள்ள மாதிரிகளை நாம் தொடர்ந்தும் பரிசோதனை செய்து வருகின்றோம்
என்றும் அவர் கூறினார். இதேவேளை, சுகாதார அமைச்சு மருத்துவ நிபுணர்கள்
அடங்கிய இரண்டு குழுக்களை பிங்கிரிய பிரதேசத்திற்கு நேற்று காலையில்
அனுப்பிவைத்ததாக அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். இக்குழுவினரும்
அப்பிரதேசத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவ்வதிகாரி கூறினார்.