புத்தளம் மாரவில பகுதியில்
நேற்றுமுன்தினம் வீழ்ந்து நொருங்கிய சிறிலங்கா விமானப்படையின் மிக்-27 போர்
விமானத்தின் கறுப்புப் பெட்டியை ஆராய்ந்து வரும் நிபுணர்கள், விமானியின்
தவறினால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விமானியின் தவறினால் இந்த விபத்து
ஏற்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என்று அவர்கள்
கூறியுள்ளனர். ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பயிற்சியை ஆரம்பித்த
போது அந்த விமானம் நல்லநிலையில் – தொழில்நுட்ப தரத்துடன் இருந்தது உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் விமானம் விழுந்து நொருங்கிய
இறுதிக்கணங்கள் குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா விமானப்படை மூத்த அதிகாரி ஒருவர்,
இந்த விபத்துக்கான உண்மையான காரணம் விரைவில் தெரியவரும் என்று
தெரிவித்துள்ளார்.
விமானி அறையின் ஒலிப்பதிவுகளில், விமானி
பிளைட் லெப்டினன்ட் தரிது ஹேரத் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக
தளத்துக்கு தகவல் கொடுத்துள்ளது பதிவாகியுள்ளது. இதையடுத்து அவர் பரசூட்
மூலம் குறித்து எந்தக் காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இந்தவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த
சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஐந்து மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை
நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.