யுத்தத்திற்கு பின்னர் சிறிலங்கா இரு
நாடுகளாக பிளவுபட்டு வருவதாக சிறிலங்காவின் தேசிய மொழிகள் மற்றும் சமூக
ஒருங்கிணைப்புக்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட
விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில்
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் உள்ள ஜனநாயக அமைப்புக்கள் செயலிழந்து வருகின்றன எனவும்
வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். “நாடு இரண்டாகப் பிளவுபடுவதைத்
தடுப்பதற்காகவே யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நாம் தற்போது ஒரு நாட்டை
அமைப்பதற்குப் பதிலாக இரு நாடுகளை உருவாக்கியுள்ளோம்” எனவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
“ஜனநாயக ஆட்சி இடம்பெறாத சிறிலங்காவின்
வடக்குப் பகுதியில் வேறுபட்ட நிர்வாக முறைமை நடைமுறையில் உள்ளது. கிழக்கில்
நாம் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக அமைப்புக்கள் உள்ள
போதிலும், அவை தமக்கான ஜனநாயக வழி நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளன”
எனவும் சிறிலங்கா அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மக்கள் ஜனநாயக அமைப்பால்
ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் ஏனைய
பகுதிகளில் பிறிதொரு நிர்வாக முறைமை அமுலில் உள்ளதாகவும்
சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளையில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான
நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை சிறிலங்கா உடனடியாக
நடைமுறைப்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் பிரேரணையை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
2005 இற்குப் பின்னர் சிறிலங்காவுக்கு
அதிகாரபூர்வ பயணத்தைமேற்கொண்டு வரும் அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரியான
மரியா ஒரேரோ கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை
சந்தித்த போது நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள்
தொடர்பில் கலந்துரையாடி உள்ளார்.
“இப்பரிந்துரைகள் தொடர்பில் சிறிலங்கா
அரசாங்கம் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதை நாம் வரவேற்கிறோம்” என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன்,
பி.பி.சி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். “கற்றுக் கொண்ட பாடங்களுக்கான
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தேசிய மட்டத்தில்
மேற்கொள்ளப்படுவதற்கு கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்குகின்றது.
இதனை மேற்கொள்ளத் தவறும் பட்சத்திலேயே
நாம் அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டும்”
எனவும் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் தெரிவித்துள்ளார். “இது
படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையாகும். இதற்கு காலதாமதம்
ஏற்படும். கம்போடியாவில் இவ்வாறான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு 30 ஆண்டுகள்
தேவைப்பட்டன” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.