எரிபொருள்களின் கிடுகிடு விலையேற்றம்
தான் ஆசியாவின் அதிசயமா? கொழும்பு கோட்டையை அழகு படுத்துவதற்கும்
நாடாளுமன்றத்தை அழகுபடுத்துவதற்கும் தேவையற்ற பகட்டு வேலைகளுக்குப்
பணத்தைக் கொட்டுவதிலும் பார்க்க மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
பல்வேறு துறைகளுக்கு அரசு மானியத்தை வழங்கலாம் அல்லவா? இவ்வாறு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான சுரேஷ்
பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.எரிபொருள்களின் விலையேற்றம் குறித்துக்
கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையின் வரலாற்றிலேயே இப்போது தான்
மிக மோசமான விலையேற்றத்தை அரசு மேற்கொண்டுள்ளது. இதுவரை சதக் கணக்கிலும்
ஒரு சில ரூபாக்களிலுமே விலை அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த
அரசுதான் இவ்வாறான அதிகளவான விலையேற்றத்தை மேற்கொண்டுள்ளது.
வன்னிப் பிரதேசம் மற்றும் தமிழ்ப்
பகுதிகளின் பெரும்பாலான கிராமங்களில் இதுவரை மின்சார வசதிகள் இல்லை. இந்தப்
பகுதி மக்கள் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தியே விளக்குகளை எரிக்கின்றனர்.
இந்த 35 ரூபா விலை யேற்றத்தால் இந்த மக்கள் பெரும் கஷ்டங்களை
எதிர்நோக்கியுள்ளனர்.
மனிதராகப் பிறந்த எவராலுமே
ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு எரிபொருள்களின் விலையை அரசு
உயர்த்தியுள்ளது. எரிபொருள்களின் விலையை உயர்த்துவதுதான் ஆசியாவின்
அதிசயமா? மக்களை தொடர்ந்தும் வறுமைக்குள்ளாக்குவதோடு மக்களின் வாழ்க்கையோடு
அரசு விளையாடுகின்றது.
நகரை அழகுபடுத்துவதாகக் கூறி கொண்டு
அரசு போலித்தனமான வேலை களை மேற்கொண்டு அதற்கு நிறைய பணத்தை வீண்
விரயமாக்குகின்றது. இவ்வாறான பகட்டு வேலைகள் மேற்கொள்வதை விடுத்து மக்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
அரசின் இவ்வாறான செயற்பாடுகளும்,
எரிபொருள் விலையேற்றமும் எதிர்க்கப்பட வேண்டியதொன்றுடன் உடனடியாகவே இதற்கான
மாற்று நடவடிகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.உலக சந்தையில் எரிபொருள் விலை
அதிகரித்ததால் இங்கு விலை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டதாக அரசு சொல்ல
முடியாது. அப்படியானால் அந்த அரசு தேவையில்லை. ஒட்டுமொத்தமாக பேரழிவை
ஏற்படுத்தும் இந்த எரிபொருள் விலையேற்றத்துக்கு அரசு மானியம் வழங்க
வேண்டும்.
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக எவர் போராட்டங்களை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றார்.