எரிபொருள் விலை உயர்வால் வட பகுதிக்கே உச்சப் பாதிப்பு; உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக எகிறும் அபாயம்


news
 எரிபொருள்களின் விலைகளை அரசு திடீரென பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து யாழ். குடாநாடு உள்ளிட்ட வட மாகாணத்தில் பொருள்களின் விலைகள் மேலும் எகிறும் என்று எதிர்வுகூறுகிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். 
 
எரிபொருள் விலை அதிகரிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்படப் போகும் மாவட்டமாக யாழ்ப்பாணமே இருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். யாழ். மாவட்டம் தனது உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளுக்காக தெற்கையே நம்பி இருப்பதாலேயே இந்த நிலைமை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
 
"அனைத்துப் பொருள்களும் தெற்கில் இருந்து தரை அல்லது கடல் மார்க்கமாகவே இங்கு எடுத்து வரப்படுகின்றன. இதனால் போக்குவரத்துச் செலவு அதிகமாக இருக்கிறது. எரிபொருள் விலையேற்றம் போக்குவரத்துச் செலவை மேலும் அதிகரிக்கும் நிலையில் பொருள்களின் விலை தாறுமாறாக எகிறுவதைத் தடுக்க முடியாது'' என்று மத்திய வங்கியின் பொருளாதாரத் துறை அதிகாரி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார். 
 
அத்தியாவசிய உணவுகள் ஒரு சிலவற்றைத் தவிர ஏனைய அனைத்திற்கும் வடபகுதி தெற்கு மாவட்டங்களிலேயே தங்கியிருப்பதால் அவற்றின் விலையில் உடனடித் தாக்கம் காணப்படும் என்றும் அவர் கூறினார். 
 
ஒரு மனிதனின் ஒரு மாதத்துக்குரிய ஆகக் குறைந்த வாழ்க்கைச் செலவு நாட்டின் ஏனைய இடங்களைவிட யாழ்ப்பாணத்திலேயே அதிகம். இலங்கையின் சாராசரி வாழ்க்கைச் செலவு 3,307 ரூபாவாக இருக்கையில் யாழ்ப்பாணத்தில் அது 3,555 ரூபாவாகக் காணப்படுகின்றது. 
 
உணவு மற்றும் உணவல்லாப் பொருள்களின் நுகர்வு விலையைக் கொண்டே வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் கணிப்பிடப்படுகின்றது. யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களிலும்கூட இந்த நிலையே காணப்படும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now