
கொழும்பிலுள்ள தேசிய நூதனசாலையில் வெள்ளிக்கிழமை இரவு புராதன பொருட்கள்
திருடப்பட்டபோது, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்கள்
இயங்காமலிருந்ததாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார்.
திருட்டுச் சம்பவம் இடம்பெற்றபோது நூதனசாலை கட்டிடத்திற்குள் எவரேனும்
இருந்தனரா என்பதை அறிவதற்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர்
பாலசூரிய கூறினார். இரவுநேரங்களில் நூதனசாலைக்குள் எவரும் இருப்பதில்லை.
அதிகாரிகள் இரவில் கதவுகளை மூடி சாவிகளை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிடுவர்.
விசாரணையின்போது இவ்விடயங்களை கருத்திற்கொள்வது அவசியம் என அவர் கூறினார்.