
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்
அணியை 6 விக்கெட்டுகளால் இந்திய அணி தோற்கடித்தது. இவ்வெற்றியின் மூலம்
இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இந்திய
அணிதக்கவைத்துக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இன்னுமொரு போட்டி
எஞ்சியுள்ளபோதிலும் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகுவதற்கான வாய்ப்பை
இழந்துள்ளது. எனினும் இலங்கை அணியுடனான போட்டியில் பங்களாதேஷ் அணி
வென்றால் பங்களாதேஷ் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெறும்.
மீர்பூர் நகரில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய
பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான நஸீர் ஜம்ஷெட் 104 பந்துகளில் 112
ஓட்டங்ளையும் மொஹமட் ஹாபீஸ் பந்துகளில் 113 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவ்விருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 224 ஓட்டங்களைக் குவித்தனர். இது
ஆசிய கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்குமான அதிகூடிய
இணைப்பாட்ட ஓட்டங்களாகும்.
இந்திய பந்துவீச்சாளர்களில் அஷோக் டிண்டா 47 ஓட்டங்களுக்கு 2
விக்கெட்டுகளையும் பிரவீன் குமார் 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும்
வீழ்த்தினர்.
பாகிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி 224 ஓட்டங்களைக் குவித்த நிலையில்,
துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஒரு ஓட்டத்தையும் பெறுவதற்கு முன்னரே தனது
முதல் விக்கெட்டை இழந்தது. 2 ஆவது பந்துவீச்சிலேயே கௌதம் காம்பீர்
ஆட்டமிழந்தார்.
எனினும் சச்சின் டெண்டுல்கரும் வீரட் கோலியும் இரண்டாவது விக்கெட்டுக்காக
19.1 ஓவர்களில் 133 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். டெண்டுல்கர் 48 பந்துகளில் 52
ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த வீரட் கோலி- ரோஹித் சர்மா ஜோடி அணி 3 ஆவது
விக்கெட்டுக்காக 172 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்
சென்றது.
ரோஹித் சர்மா 83 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டமிழந்தார்.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவராக வீரட்
கோலி விளங்கினார்.
அவர் 148 பந்துகளில் ஒரு சிக்ஸர், 22 பௌண்டரிகள் உட்பட 183 ஓட்டங்களைப்
பெற்றார். ஆசிய கிண்ண போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட
எண்ணிக்கை இதுவாகும்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் ஹொங்கொங் அணிக்கெதிரான
போட்டியில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 144 ஓட்டங்களைப் பெற்றமையே இதுவரை
சாதனையாக இருந்தது.
48 ஆவது ஓவரில் இந்திய அணிக்கு 12 ஓட்டங்கள் மாத்திரமே தேவையான நிலையில்
வீரட் கோலி ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும்
எம்.எஸ். டோனி ஆட்டமிழக்காமல் 4 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணி 47.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்தது வெற்றி
இலக்கான 329 ஓட்டங்களைக் கடந்தது. ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி
வெற்றிகரமாக கடந்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
இத்தொடரில் நாளை மறுதினம் இலங்கை –பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இறுதிப்போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

