
இங்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் மக்கள் தங்கள் துயரங்களை முறையிட்டார்கள்.
2009ம் ஆண்டு மே மாதத்தில் போர் முடிவுக்கு வந்தபோது இடம்பெயர்ந்த முள்ளிவாய்க்கால் மக்கள் வவுனியா முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அடுத்து கோம்பாவில் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியொன்றை துப்புரவு செய்து திம்பிலி என்ற இடத்தில் இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
இடம்பெயர்ந்து மூன்றாண்டுகள் நெருங்குகின்ற போதிலும் தம்மை சொந்தக் குடிமனைகளில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கவலை தெரிவித்தார்கள்.
வாழ்வாதார பிரச்சனைகளுக்கு மத்தியில் தமது பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவும் உரிய வசதி இல்லை என்று இங்கு பேசிய மக்கள் கூறினர்.
இடம்பெயர்ந்தபோது இராணுவத்திடம் சரணடைந்த தமது பிள்ளைகள் தொடர்பில் இன்னும் தகவல்கள் ஏதும் இல்லையென்று சிலர் தெரிவித்தனர்.
தம்மை தமது சொந்த இடங்களில் குடியமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்க, மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு கூறிவருகின்ற முன்னேற்ற கரமான தகவல்களை நடைமுறையில் காணமுடியவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
பல பிரதேசங்களில் மக்கள் உரிய இடங்களில் குடியமர்த்தப்படவில்லை எனவும் இன்னும் சில இடங்களில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் எவை என்ற எல்லைக்கு வரையறை இல்லை என்றும் எதிர்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் பற்றி அரசிடம் முறையான கொள்கைத்திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் என்றும் ரணில் குறிப்பிட்டார்.