
நேற்றைய தினம் இந்திய அணி போனஸ் புள்ளிகளால் வெற்றிபெறாததன் காரணமாக பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இந்திய அணியின் வெற்றியை அடுத்து இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை முற்றாக இழந்தது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெறுமாயின் பங்களாதேஷ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும், தோல்வி அல்லது போட்டி சமநிலையில் நிறைவடையுமாயின் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.
இந்த ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறாததன் காரணமாக இலங்கை அணி ஆசியக்கிண்ணத் தொடர் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறாத நிலை ஏற்பட்டது. இதுவரை இடம்பெற்ற 10 ஆசியக்கிண்ணத் தொடர்களில் நான்கில் இலங்கை அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன், ஆறில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.
நேற்றைய தினம் இந்திய அணி 330 ஓட்டங்களைப் பெற்று போட்டியை வெற்றிகாண்டது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி வெற்றிபெற்ற போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட 6ஆவது மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். அத்தோடு இந்திய அணி தனது ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றில் துரத்தியடித்த மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையாக இது அமைந்தது.
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் சதங்களைப் பெற்றனர். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஓர் அணி சார்பாக 2 அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சதங்கள் குவிக்கப்பட்ட 99ஆவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் சதம் குவித்த 24ஆவது தடவையாக இது அமைந்தது. ஓர் அணி சார்பாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சதங்கள் குவிக்கப்பட்டு அவ்வணி தோல்வியைச் சந்தித்த 21ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் சதம் குவித்து அப்போட்டியில் அவ்வணி தோல்வியடைந்த ஐந்தாவது தடவையாகவும் இது அமைந்தது.
நேற்றைய தினம் பாகிஸ்தானின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் 224 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்தனர். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட 34ஆவது சிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். தோல்வியடைந்த அணி சார்பாக பெறப்பட்ட ஐந்தாவது மிகப்பெரிய இணைப்பாட்டமாக இது அமைந்தது. ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் ஒரு அணி தோல்வியடையும் போது அவ்வணி சார்பாக பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகவும் இது அமைந்தது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் விராத் கோலி 183 ஓட்டங்களைப் பெற்றார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் 150 இற்கு மேற்பட்ட ஓட்டங்களைப்பெற்ற முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. இது அவரது 11ஆவது சதமாகும். அத்தோடு இந்திய வீரர் ஒருவர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 183 ஓட்டங்களைப் பெறும் மூன்றாவது தடவையாக இது அமைந்தது. இதற்கு முன் சௌரவ் கங்குலி, மகேந்திரசிங் டோணி இருவரும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 183 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி வெற்றிபெறும் போது அவ்வணி சார்பாகக் குவிக்கப்பட்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை கோலி 3 ஓட்டங்களால் தவறவிட்டார். அவுஸ்ரேலியாவின் ஷேன் வொற்சன் 185 ஓட்டங்களை பங்களாதேஷ் அணிக்கெதிராக ஆட்டமிழக்காது பெற்றமை முதலாவது இடத்தில் காணப்படுகிறது. இன்னமும் 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தால் ஷேன் வொற்சனை விராத் கோலி முந்தியிருக்க முடியும். தற்போது கோலி 183 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்தை மகேந்திரசிங் டோணியும் பகிர்ந்துள்ளார்.
விராத் கோலி தனது 11 சதங்களில் 7 சதங்களை இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் போது பெற்றுள்ளார். இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் போது விராத் கோலி 58.40 என்ற சராசரியில் ஓட்டங்களைப் பெறுகிறார். 2000 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் போது பெற்ற வீரர்களில் இது இரண்டாவது மிகச்சிறந்த சராசரியாகும். ஷேன் வொற்சன் முதலிடத்தில் 59.10 என்ற சராசரியில் ஓட்டங்களைக் குவிக்கிறார்.
விராத் கோலி இந்த ஆண்டில் 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி 730 ஓட்டங்களை 73 என்ற சராசரியில் குவிக்கின்றார். இதில் 3 சதங்களும், 3 அரைச்சதங்களும் உள்ளடக்கம். விராத் கோலி தான் பங்குபற்றிய இறுதி 4 போட்டிகளில் 3 சதங்களும், ஒரு அரைச்சதமும் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் விராத் கோலி இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார். முதலாவது இடத்தில் இலங்கையின் குமார் சங்கக்கார - விராத் கோலியை விட 5 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றுக் காணப்படுகிறார். எனினும் குமார் சங்கக்கார - விராத் கோலியை விட 7 போட்டிகளில் அதிகமாகப் பங்குபற்றியுள்ளார்.
நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் போது இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி ஆடுகளத்தில் ஆட்டமிழக்காது காணப்பட்டார். இவ்வாறு அணி வெற்றிபெறும் போது ஆடுகளத்தில் அவர் காணப்பட்ட 31ஆவது தடவை இதுவாகும். ஒரு துடுப்பாட்ட வீரர் வெற்றிபெறும் போது ஆடுகளத்தில் அதிகமாகக் காணப்பட்ட சந்தர்ப்பங்களில் ஜொன்ரி ரூட்ஸ் 33 தடவைகளும், இன்ஸமாம் உல் ஹக் 32 தடவைகளும் டோணியை விட அதிகமாகக் காணப்படுகின்றனர்.
அணித்தலைவராக இலங்கையின் அர்ஜூன ரணதுங்க டோணியின் 19 தடவைகளை விட 3 தடவைகள் ஆடுகளத்தில் அதிகமாகக் காணப்பட்டிருக்கிறார்