முதலிடத்தை இழந்தார் குமார் சங்கக்கார

வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தை இழந்துள்ளார். இடம்பெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாகப் பிரகாசிக்காததன் காரணமாகவே அவர் முதலிடத்தை இழந்துள்ளார்.

டெஸ்ட் வீரர்களுக்கான துடுப்பாட்ட முதலிடத்தை அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க்கும், ஏபி.டி.வில்லியர்ஸூம் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

37 புள்ளிகளை இழந்து 813 புள்ளிகளைப் பெற்றுள்ள குமார் சங்கக்கார நான்காவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். முதலிடத்தைப் பெற்றுள்ள ஏபி.டி.வில்லியர்ஸ், மைக்கல் கிளார்க் இருவரும் 821 புள்ளிகளோடு முதலிடத்தில் காணப்படுகின்றனர். ஆகவே இங்கிலாந்திற்கெதிரான இரண்டாவது போட்டியில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடும் பட்சத்தில் முதலிடத்தை குமார் சங்கக்காரவால் மீண்டும் கைப்பற்றக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனினும் அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அத்தொடரில் மைக்கல் கிளார்க் சிறப்பாக ஆடுவாராயின் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் மைக்கல் கிளார்க்கிற்கு காணப்படுகின்றன.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய தரப்படுத்தலில் மூன்றாமிடத்தை தென்னாபிரிக்காவின் ஜக்ஸ் கலிஸூம், நான்காமிடத்தை குமார் சங்கக்காரவும், பாகிஸ்தானின் யுனிஸ் கான், மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நரின் சந்தர்போல் ஆகியோர் ஐந்தாம் ஆறாம் இடங்களிலும் காணப்படுகின்றனர்.

இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் சிறப்பாக ஆடாத நிலையில் புள்ளிகளை இழந்துள்ள போதிலும் இலங்கையின் திலான் சமரவீர தொடர்ந்தும் ஏழாம் இடத்தில் காணப்படுகிறார்.

எட்டாவது இடத்தில் தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லாவும், ஒன்பதாவது இடத்தில் இங்கிலாந்தின் ஜொனதன் ட்ரொட்டும் காணப்படுகின்றனர். இதில் ஜொனதன் ட்ரொட் 6 இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். பத்தாவது இடத்தில் நியூசிலாந்தின் ரொஸ் ரெய்லர் காணப்படுகின்றார்.

இங்கிலாந்து, இலங்கை வீரர்களைப் பொறுத்தவரையில், அலஸ்ரெயர் குக் 8 இடங்களை இழந்து 14ஆவது இடத்திலும், இயன் பெல் புள்ளிகளை இழந்த போதிலும் அதே 18ஆவது இடத்திலும், மஹேல ஜெயவர்தன 7 இடங்கள் முன்னேறி 20ஆவது இடத்திலும், கெவின் பீற்றர்சன் இரண்டு இடங்களை இழந்து 22ஆவது இடத்திலும், மற் பிரயர் இரண்டு இடங்களை இழந்து 24ஆவது இடத்திலும், அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் புள்ளிகளை இழந்துள்ள போதிலும் அதே 28ஆவது இடத்திலும், திலகரட்ண டில்ஷான் 4 இடங்களை இழந்து 35ஆவது இடத்திலும், பிரசன்ன ஜெயவர்தன 7 இடங்கள் முன்னேறி 47ஆவது இடத்திலும், டினேஷ் சந்திமால் 2 இடங்கள் முன்னேறி 60ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் டேல் ஸ்ரெய்ன், சயீட் அஜ்மல், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோர் தொடர்ந்தும் முதல் மூன்று இடங்களில் காணப்படுகின்றனர். நான்காம் இடத்தில் காணப்பட்ட ஸ்ருவேர்ட் இரண்டு இடங்களை இழந்து ஆறாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். நான்காவது இடத்தில் பீற்றர் சிடிலும், ஐந்தாவது இடத்தில் வேர்ணன் பிலாந்தரும் காணப்படுகின்றனர்.

13ஆம் இடத்தில் காணப்பட்ட ரங்கன ஹேரத் ஆறு இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். எட்டாவது இடத்தில் பாகிஸ்தானின் அப்துர் ரெக்மான் காணப்படுகின்ற அதேவேளை, ஏழாவது இடத்தில் காணப்பட்ட இங்கிலாந்தின் கிரேம் ஸ்வான் ஒன்பதாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். 10ஆவது இடத்தில் தென்னாபிரிக்காவின் மோர்னி மோக்கல் காணப்படுகின்றார்.

ஏனைய இங்கிலாந்து, இலங்கை வீரர்களைப் பொறுத்தவரை, மொன்ரி பனசர், சானக வெலகெதர ஆகியோர் தலா ஒரு இடத்தை இழந்து 32ஆவது மற்றும் 34ஆவது இடத்திலும், சுராஜ் ரந்தீவ் 8 இடங்கள் முன்னேறி 47ஆவது இடத்திலும், சுரங்க லக்மால் அதே 67ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now