
இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் மண்டியிட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்த சில வாரங்களுக்கு பின்னர் இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று கூட்டமைப்பு இந்தியா சென்றுள்ளது.
இதன் பின்னணியில் ஏதோவொரு இரகசிய உடன்பாடு இந்தியாவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்டுள்ளமை புலனாகிறது.
அதேவேளை எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை நாட்டுக்குள்ளேயே பேசித் தீர்க்க வேண்டும். அதைவிடுத்து கூட்டமைப்பு இந்தியா சென்று அதன் தலையீட்டை ஏற்படுத்துவது பிழையான செயலாகும். இதன் மூலம் தாம் சார்ந்த மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது.
அதேவேளை அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றாமை, மக்களின் காணிகளை இராணுவத்திற்கு வழங்குவதும், காணாமல் போனோரின் பெயர் விபரப் பட்டியலை வெளியிடாமை, அம்மக்களின் உரிமைகளை வழங்காமை போன்ற செயற்பாடுகளினால் எமது நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிடும் நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவும் கூட்டமைப்பும் உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதில் அக்கறை காட்டவில்லை.
மாறாக இந்தியா வடக்கு கிழக்கிலுள்ள வளங்களையும் கடல் வளங்களையும் கொள்ளையடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றது. அதேபோன்று கூட்டமைப்பும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆயுதமாகக் கொண்டு தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் வியூகத்தையே முன்னெடுக்கின்றது.
இந்த உண்மையை தமிழ் மக்கள் புரிந்துகொண்டு உண்மையான தமிழ் மக்களுக்கான சக்திகளுடன் இணைய வேண்டும். 25 வருடங்களுக்கு முன்னதாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்காது. மாறாக தமிழ் மக்கள் உட்பட அனைவருக்கும் சம உரிமைகள் சுதந்திரத்தை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.