இனவாத எதிர்ப்பு போராட்டத்தில் முஸ்லிம்கள் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்

இனவாத எதிர்ப்பு போராட்டத்தில் முஸ்லிம்கள் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்இன்றைய அரசாங்கம், இனவாத அரக்கனை அவிழ்த்துவிட்டுள்ளது. இந்த அராஜக அரக்கன், தமிழ் இந்துக்களை அல்லது தமிழ் கிறிஸ்தவர்களை மாத்திரமே குறி வைத்துள்ளது என்ற மூட நம்பிக்கையை முஸ்லிம் மக்கள் கைவிட வேண்டும்.

இந்நாட்டில் இனவாதம் தமிழ் மக்களை மாத்திரம் குறி வைக்கவில்லை. இனவாதம் அனைத்து தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் குறி வைத்துள்ளது. சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களையும்கூட அது குறி வைக்கிறது.

தமிழர்களில் ஆரம்பித்து முஸ்லிம்கள் மக்கள் மீது கை வைக்கும் நிலைமை நீண்ட காலத்திற்கு முன்னமேயே உருவாகி விட்டது. தற்போது அது பகிரங்கமாக மேடை ஏறியுள்ளது. எனவே இனவாத அராஜகத்திற்கு எதிரான போராட்டத்தில், முஸ்லிம் மக்களும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

அதன் மூலமாகவே நல்ல சிந்தனை கொண்ட பெரும்பான்மை சிங்கள மக்களை தட்டி எழுப்ப முடியும். அவர்களையும் நியாயத்தின் பக்கம் திசை திருப்ப முடியும். இத்தகைய சிந்தனை மாற்றம் முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாக வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

பிரிபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, தமிழ் பேசும் மக்கள் தாம் செறிவாக வாழும் பகுதிகளில் தம்மை தாமே ஆள நினைக்கிறார்கள். தாம் கடைபிடிக்கும் மத, மொழி உரிமைகளை பேணி வாழ விரும்புகிறார்கள். தமது சொந்த உழைப்பினால் தாம் உருவாக்கிய தொழில்களை முன்னெடுத்து சட்டத்திற்கு உட்பட்டு வாழ நினைக்கிறார்கள். தமது வீடு, வாசல், காணிகளை காப்பாற்றிகொண்டு வாழ விரும்புகிறார்கள்.

இவற்றிற்கு எதிராகத்தான், பேரினவாதம் அராஜகம் செய்யப்பார்க்கிறது. அப்பாவி சிங்கள மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிய பிறகும் தமிழ் மக்களுக்கு எதுவும் தரக்கூடாது என அடம் பிடிக்கிறது. அரசியல் சட்டத்தில் உள்ள 13 ம் திருத்தத்தையும், தாமே உருவாக்கி உலக சபையில் முன்வைத்த கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளையும்கூட அமுல் செய்யவிட மாட்டோம் என ஆணவக்கதை பேசுகிறது.

தமிழ் மக்களின் சார்பாக நடந்த போராட்டம் பல்வேறு தவறுகளையும், காட்டிகொடுப்புகளையும், சகோதர படுகொலைகளையும் கண்டுள்ளது. தவறுகள் இல்லாத போராட்டம் உலகில் எங்குமே நடைபெறவில்லை. ஆனால் தவறுகளை பட்டியல் போடுவதன் மூலம் நிகழ்காலத்தில் இனவாதத்திற்கு துணை போக முடியாது. இதை முஸ்லிம் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் போராட்டம் இன்று இலங்கையில் மாத்திரம் அல்ல, உலக மட்டத்திலும் நடக்கின்றது. அது பல்வேறு தடைகளை தாண்டிய நிலையில் உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பி வருகின்றது.

ஆனால் இந்த போராட்டம் தமிழ் மக்களுக்கான போராட்டம் மாத்திரம் அல்ல. இந்த போராட்டத்தின் மூலம் இந்நாட்டில் உருவாகக்கூடிய அதிகார பரவலாக்கல் உள்ளிட்ட அனைத்து புது மாற்றங்களினால் வரக்கூடிய நன்மைகள், இந்நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவருக்கும் கிடைக்கும். அதை யாரும் தடை செய்ய முடியாது.

ஆனால் தமது உரிமைகளுக்காக முஸ்லிம் மக்களும் போராட வேண்டும். அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும். அதேபோல் போராடாமல் நியாயம் கிடைக்காது என்பதை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமது பள்ளிகளையும், மொழி-கலாச்சாரத்தையும், வாழ்விடங்களையும், தொழில்களையும், வீடு-வாசல்-காணிகளையும் காப்பாற்றுவதற்கு போராட வேண்டும். பேரினவாத அராஜகத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டத்தில் தமிழ் மக்களுடன் தம்மையும் இணைத்துக்கொள்ள முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now