யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புதன்கிழமை
ஆரம்பமாகவுள்ள நாடு தழுவிய மாகாண ஆளுநர்களது கூட்டத்திற்கென பெருமளவு
வடமாகாண சபை நிதி அள்ளிக்கொட்டப்படுவதாக குற்றச்சாட்டுக்கள்
எழுந்துள்ளன.வருகை தரும் எட்டு மாகாண ஆளுநர்களுடன் அவர்களது
விருந்தினர்களென சுமார் 34 பேரளவில் வடக்கை சுற்றிப்பார்க்க வருகை
தரவுள்ளதாக தெரியவருகின்றது.
அவர்களது தங்குமிட வசதிகளை நட்சத்திர
தரத்தில் பேணுமாறு அறிவுறுத்தல்களை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி
விடுத்துள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.இதே வேளை ஆளுநர்
சந்திரசிறி அவுஸ்திரேலியாயிலுள்ள தனது மகள்கள் உட்பட நான்கு
விருந்தினர்களுடன் பங்கெடுக்கவுள்ளதாக அவரது அதிகாரிகள்
கூறுகின்றனர்.இவர்களுக்கப்பால் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களென
எவ்வளவு பேர் கலந்து கொள்வரென்பது பற்றி முழுமையான தகவல்கள் இதுவரை
வெளியாகியிருக்கவில்லை.
இதனிடையே அள்ளி வீசப்படும் வடமாகாணசபை
நிதியில் பெருமளவிலான நிதி அதிகாரிகளது பொக்கட்களை நிரம்ப வைப்பதாகவும்
குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.கலாச்சாரத்தை பேணுவதாக கூறும் பிரிவின்
பெண்மணியொருவர் மட்டும் மூன்று மில்லியன் பணத்தினை வருகை தரவுள்ளவர்களை
வரவேற்கவென தனது கைகளில் கொண்டுதிரிவதாக கூறப்படுகின்றது.அதே வேளை மாநகரசபை
திடலில் கண்காட்சி மாநாடென பெருமளவு பணம் அள்ளி
வீசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றது
நாளை மறுதினம் புதன்கிழமை முதல்
ஆரம்பமாகின்ற ஆளுநர்களது மாநாட்டில் முதல் நாள் நிகழ்வாக மாநாடும் அடுத்த
தினம் சாதனைக்கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.தொடர்ந்து தெற்கிலிருந்து வருகை
தரும் விருந்தினாகள் நல்லூர் நயினாதீவு நாகவிகாரை மற்றும் பொது
நூலகமென்பவற்றை சுற்றிப்பார்க்கவுள்ளனர்.தொடர்ந்து முல்லைத்தீவில்
முள்ளிவாய்க்கால் பிரதேசங்களையும் அவர்கள் சுற்றிப்பார்க்கவுள்ளனர்.
இதனிடையே வன்னியில் மழை காலம்
ஆரம்பமாகியுள்ள நிலையில் பெரும்பாலான பாடசாலைகள் இழுத்து மூடப்படும்
கட்டத்தை அடைந்துள்ளன. கூரைகளை மேயப்பயன்படுத்தப்பட்ட கிடுகுகள்
உக்கியமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.எனினும் அங்கு கிடுகுகளை வாங்கி
கூரைகளை திருத்த மாகாணசபையிடம் நிதி இல்லையென மாகாணசபை அதிகாரிகள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.