வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தை
தடுத்திருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர்
டீ.ஈ.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார். சிறைச்சாலை நிலைமைகள் தொடர்பில்
முன்வைத்த பரிந்துரைகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.
பரிந்துரைகளை உரிய முறையில்
அமுல்படுத்தியிருந்தால் இந்த உயிர் பலிகளை தவிர்த்திருக்கலாம் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர்
இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் வெலிக்கடை
சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து, அறிக்கை
சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நிலைமைகளை நேரில் அவதானித்து
இது குறித்து அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகளை முன்வைத்திருந்த போதிலும்
துரதிஸ்டவசமாக இந்தப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் வருத்தம்
வெளியிட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த ஆயுத
வன்முறைகளில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பில்
அடுத்துவரும் நாட்களில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெலிக்கடை
சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலவரத்துக்கான காரணங்கள் மற்றும் அவற்றின் பின்னணி குறித்து ஆராய்ந்து
அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மோதல்களின் பின்னர் கைதிகள்
சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக சுமத்தப்பட்;டு வரும் குற்றச்சாட்டுக்கள்
தொடர்பில் தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என அவர்
குறிப்பிட்டுள்ளார்.